செய்திகள்
செந்தில்பாலாஜி - வைகைசெல்வன்

செந்தில்பாலாஜியை அ.தி.மு.க.வின் சாபம் சும்மா விடாது - வைகைசெல்வன்

Published On 2020-02-03 14:44 GMT   |   Update On 2020-02-03 14:44 GMT
செந்தில்பாலாஜியை அ.தி.மு.க.வின் சாபம் சும்மா விடாது என கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகைசெல்வன் கூறினார்.
கரூர்:

கரூர் மத்திய நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கரூர் ஜவகர்பஜார் சுபா‌‌ஷ்சந்திரபோஸ் சிலை அருகில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதற்கு மத்திய நகர செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். தெற்கு நகர செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், வடக்கு நகர செயலாளர் வெங்கமேடு பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளரும், செய்தி தொடர்பாளருமான வைகைசெல்வன் கலந்து கொண்டு பேசுகையில், கடந்து ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, நிலம் தருகிறோம் என பொய்யான வாக்குறுதிகளை கூறி தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். அதன் பிறகு மக்கள் சிந்தித்து பார்த்து நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. வுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தனர். தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் ஆதரவை அளித்தனர். இதைவைத்து பார்க்கையில் மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சர் ஆசை 2021-ல் ஈடேறுமா என தற்போது பலரும் பேசதொடங்கிவிட்டனர். ஜெயலலிதா கூறியதைப்போல் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்.

2017-ல் தொடுக்கப்பட்டது என்ன வழக்கு?. உற்றார் உறவினருடன் சேர்ந்து கொண்டு அரசுவேலைக்கு உத்தரவாதம் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து அதனை திருப்பி கொடுக்காமல் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு இருக்கிறார் கொேரானா வைரஸ் என்கிற செந்தில்பாலாஜி. அதற்கு இப்பதான் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். சென்னையில் வீட்டையெல்லாம் சீல் வைத்துவிட்டனர். திக்கு தெரியாத காட்டில் நின்று கதறி கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வின் சாபம் அவரை சும்மா விடாது. கருணாநிதி ஆட்சியில் இருந்த போது தான், இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமையை பற்றி தி.மு.க.வினர் பேசுகிறீர்கள் என்றார்.

கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட், தூத்துக்குடி ஸ்டெர்லைட் விரிவாக்கம் போன்றவற்றை அனுமதித்ததே தி.மு.க. தான். ஆனால் தற்போது அதனை எதிர்ப்பது போல் அவர்களே இரட்டை வேடம் போடுகின்றனர். ஆனால் அ.தி.மு.க. தற்போதும் கூட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு குரல் கொடுத்து தான் வருகிறது. கரூரில் நடந்த போலீஸ் சோதனைக்கு நாங்கள் பொறுப்பல்ல. மாறாக மோசடி வழக்கில் சிக்கியதால் நீதிமன்றம் உத்தரவின் பேரில் நடந்திருக்கிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை கரூர் மக்கள் எங்களுக்கு அளித்திருக்கிறார்கள். வருகிற நகராட்சி, பேரூராட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் ஆதரவுடன் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றார்.

இந்த கூட்டத்தில், கீதா எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், துணை தலைவர் தானே‌‌ஷ் என்கிற முத்துக்குமார், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.வி.செந்தில்நாதன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News