செய்திகள்
அணையை மூவர் குழுவினர் ஆய்வு செய்த காட்சி.

முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது- மூவர் குழுவினர் உறுதி

Published On 2020-01-29 05:19 GMT   |   Update On 2020-01-29 08:10 GMT
முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது. பேபி அணையை பலப்படுத்திய பின் முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கலாம் என்று மூவர் குழு தலைவர் குல்சன்ராஜ் கூறினார்.
கூடலூர்:

தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க மூவர் குழு உச்சநீதிமன்ற பரிந்துரையின்படி அமைக்கப்பட்டது.

இந்த குழு அணைப்பகுதியில் ஆய்வுசெய்து ஆலோசனைகளை வழங்கி வருகிறது. மேலும் இவர்களுக்கு துணையாக ஐவர் குழுவினர் உள்ளனர். மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் குழுவிற்கு தலைவராக உள்ளார்.

தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன், கேரள அரசு சார்பில் நீர்வள ஆதார அமைப்பின் செயலர் அசோக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதியில் அணைப்பகுதியில் ஆய்வு நடத்தியது.

தற்போது 7 மாதங்களுக்கு பின்னர் மூவர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மெயின் அணை, பேபி அணை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். நீர் கசிவு கேலரியில் நீர்மட்டத்திற்கு ஏற்ப நீர் கசிவு உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து 13 ‌ஷட்டர்களில் 2 மற்றும் 4-வது ‌ஷட்டர்களை இயக்கி பார்த்தபோது அதன் இயக்கம் சரியாக இருந்தது. இந்த ஆய்வில் மத்திய நீர்வள ஆணைய இயக்குனர் ராஜீவ்சிங்கால், இணை இயக்குனர் நிதின்குமார், காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணி, பெரியார் அணை செயற்பொறியாளர்கள் சாம் இர்வின் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து குமுளியில் பெரியாறு அணை கட்டுப்பாடு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழக மற்றும் கேரள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மூவர் குழு தலைவர் குல்சன்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது. பேபி அணையை பலப்படுத்திய பின் முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கலாம். 2 அணைகளுக்கும் இடையே உள்ள எர்த் டேம் மீது பாதை பராமரிப்பு பணியை தமிழக அரசு செய்யலாம்.

பேபி அணையை பலப்படுத்துவதற்காக அப்பகுதியில் சில மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறையிடம் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணைப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.




Tags:    

Similar News