செய்திகள்
கோப்பு படம்

கஞ்சா பெண் வியாபாரியை பொறிவைத்து பிடித்த போலீசார் - 6 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2020-01-25 14:43 GMT   |   Update On 2020-01-25 14:43 GMT
மதுரை அருகே கஞ்சாவுக்கு அதிக பணம் தருவதாக கூறி பெண் வியாபாரியை பொறிவைத்து பிடித்த போலீசார் அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மதுரை:

மதுரை மாவட்டம், திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர், மேலூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இளைய சமுதாயம் போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்வை தொலைக்கும் சூழல் ஏற்படுகிறது.

கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் மதுரையை அடுத்துள்ள நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. போலீசார் தகவலறிந்த சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் கஞ்சா விற்பனை கும்பல் அதற்கு முன்னதாகவே தப்பி செல்வது அடிக்கடி நடந்து வந்தது.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி பெண் கஞ்சா வியாபாரியின் செல்போன் எண்ணை கண்டுபிடித்தனர்.

அதன்மூலம் அந்த பெண்ணிடம் வாடிக்கையாளர் போல் பேசிய போலீசார், தங்களுக்கு கஞ்சா வேண்டும் என்றும், அதற்கு அதிக பணம் தருவதாகவும் கூறியுள்ளனர்.

இதையடுத்து அந்த பெண், செக்கனூரணி தேனி மெயின்ரோட்டில் வீடு உள்ளதாகவும், பணத்துடன் அங்கு வந்து கஞ்சாவை வாங்கி செல்லுமாறு கூறியுள்ளார்.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பெண்ணை கைது செய்தனர்.விசாணையில் அவர் பாண்டி மனைவி தமிழரசி (வயது 53) என தெரியவந்தது. தொடர்ந்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 6 கிலோ 300 கராம் கஞ்சா, ரூ. 40 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாடிக்கையாளர் போல் தன்னிடம் பேசியது போலீஸ் தான் என்பதை அறிந்து தமிழரசி செய்வதறியாது திகைத்தார்.
Tags:    

Similar News