செய்திகள்
நாராயணசாமி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்- நாராயணசாமி அறிவிப்பு

Published On 2020-01-21 04:03 GMT   |   Update On 2020-01-21 04:03 GMT
புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:

நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசாக இருந்தாலும், மத்திய அரசின் நிறுவனமாக இருந்தாலும் மாநிலத்தில் ஒரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் மாநில அரசின் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுத்த முடியாது.

அதனை மத்திய அரசு புறக்கணித்து மாநில அரசுகளை உதாசீனம் செய்கிறது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

ஏற்கனவே இந்த திட்டத்திற்கு எதிராக புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன். புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News