செய்திகள்
கோப்பு படம்

வி‌ஷம் கலந்த மது குடித்த அ.தி.மு.க. பிரமுகர் பலி - முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது

Published On 2020-01-09 07:05 GMT   |   Update On 2020-01-09 07:05 GMT
பரமத்தி அருகே விஷம் கலந்த மது குடித்த அதிமுக பிரமுகர் பலியான சம்பவம் குறித்து போலீசாரால் தேடப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருக்கூர் ஊராட்சியில் கடந்த மாதம் 27-ந் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இதில் 2-வது வார்டில் சுப்பையாம்பாளையத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஆறுமுகம் (வயது 52) என்பவருடைய மனைவி ராஜாமணி, 6-வது வார்டில் இருக்கூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் செந்தில்குமார் (40) என்பவருடைய மனைவி சத்யா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் ஆறுமுகம் (52), ஏற்கனவே இருக்கூர் ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்துள்ளார். இதனால் ஆறுமுகம் தனது மனைவியை துணை தலைவராக தேர்ந்தெடுக்க, செந்தில்குமாரிடம் ஆதரவு தருமாறு கேட்டுள்ளார். ஆனால், இதற்கு செந்தில்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 30-ந் தேதி ஆறுமுகம் இருக்கூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றும் சரவணனுடன் (44) சேர்ந்து செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர் தியாகராஜனை மது குடிக்க அழைத்துள்ளார்.

பின்னர் அவர்கள் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து இருக்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மது குடித்தனர்.

அப்போது ஆறுமுகம், சரவணன் ஆகியோர் சேர்ந்து செந்தில்குமார் மற்றும் தியாகராஜனுக்கு மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்தனர். இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர்களுக்கு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வந்த ஆறுமுகத்தை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இதனிடையே, மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் செந்தில்குமார் சேர்க்கப்பட்டார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

செந்தில்குமார் உடல், கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆறுமுகம், இன்று காலை பரமத்தி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அவரை கைது செய்து, மதுவை எங்கு வாங்கினீர்கள்?, அதில் என்ன வி‌ஷத்தை கலந்தீர்கள்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட சரவணன், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாமக்கல் மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News