செய்திகள்
ஆம்புலன்சை ஓட்டி வந்த டிரைவர் ஆகாஷ்.

3 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்

Published On 2019-12-07 04:56 GMT   |   Update On 2019-12-07 04:56 GMT
90 கி.மீ. தூரத்தை 1.10 மணி நேரத்தில் கடந்து 3 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கள்ளாங்கட்டு வலசு பகுதியில் வசித்து வருபவர் சங்கீதா. இவரது மகன் சந்தோஷ் (3). இவன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான்.

இதனை தொடர்ந்து வெள்ளகோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். திடீரென சந்தோசுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவனை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

இதற்காக ஆகாஷ் (21) என்பவரின் மின்னல் என்ற பெயரிட்ட ஆம்புலன்ஸ் (ஆம்னி வாகனம்) மூலம் இரவு 7 மணியளவில் குழந்தையை ஏற்றினார்கள். டிரைவர் ஆகாஷ் ஆம்புலன்சை ஓட்டி வந்தார்.

வெள்ளகோவிலில் இருந்து கோவைக்கு 90 கி.மீ. தூரம் ஆகும். இந்த ஆம்புலன்ஸ் கோவை அரசு மருத்துவமனையை 1 மணி நேரம் 10 நிமிடத்தில் வந்தடைந்தது. அதாவது இரவு 8.10 மணிக்கு வந்து சேர்ந்தது.

உடனடியாக குழந்தை சந்தோசை குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டான்.

வெள்ளகோவில்- கோவைக்கு பஸ்சில் பயணம் செய்தால் குறைந்தது இரண்டரை மணி நேரம் ஆகும். ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகாஷ் 1மணி நேரம் 10 நிமிடத்தில் வந்து குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவினார்.

ஆம்புலன்சில் அனைத்து விளக்குகளை ஒளிர செய்து சைரன் ஒலியுடன் மின்னல் வேகத்தில் ஓட்டி வந்தேன். குழந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பது தான் எனது குறிக்கோளாக இருந்தது.

சாலை போக்குவரத்து நெருக்கடியுடன் தான் இருந்தது. சிரமப்பட்டு கோவையை அடைந்தாலும் குழந்தை காப்பாற்றப்பட்டதால் நெகிழ்ச்சி அடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

குறுகிய நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்கு கொன்டு சென்று சேர்த்து உயிரை காப்பாற்றிய டிரைவர் ஆகாசுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Tags:    

Similar News