செய்திகள்
மதுரை மீனாட்சியம்மன் கோவில்

பாபர் மசூதி இடிப்பு தினம்: மதுரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

Published On 2019-12-06 08:50 GMT   |   Update On 2019-12-06 08:50 GMT
பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது.
மதுரை:

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு இன்று அதிகரிக்கப்பட்டு இருந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதுரை மாநகரில் உள்ள முக்கிய கோவில்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஜார்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மதுரை ரெயில் நிலையத்தில் தீவிர சோதனைக்குப் பிறகே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ரெயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தண்டவாளம் மற்றும் பயணிகளின் உடமைகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் உள்ளதா? என்று சோதனை செய்தனர்.

மேலும் ரெயில் நிலையத்தில் திரியும் சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

மதுரை இருப்பு பாதை, காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் சார்பு ஆய்வாளர்கள், ஆளிநர்கள் உள்பட 65 பேரை கொண்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரை புறநகர் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் முக்கிய கோவில்கள், பஸ் நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அழகர்கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ஆய்வு செய்தார். மதுரை மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News