செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட விபல்குமார் .

நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-11-21 10:30 GMT   |   Update On 2019-11-21 10:30 GMT
நெட்டப்பாக்கத்தில் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேதராபட்டு:

நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் விபல்குமார் (வயது40) இவரது சொந்த ஊர் வில்லியனூர் ஆகும். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

விபல்குமார் தினமும் பணிமுடிந்து வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு செல்வது வழக்கம். ஆனால் நேற்று இரவு பணி முடிந்த பின்னர் விபல்குமார் வீட்டிற்கு செல்லவில்லை. போலீஸ் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பில் ஓய்வு எடுக்க செல்வதாக சக போலீசாரிடம் கூறி சென்றார்.

ஆனால் வெகுநேரமாக விபல்குமார் பணிக்கு வரவில்லை. ஓய்வு எடுக்கும் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

பணி சுமை காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்தாரா? என்பது உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் போலீசாரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News