செய்திகள்
பலியான டிரைவர் ரமேஷ்குமார்

வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் உள்பட 2 பேர் பலி

Published On 2019-11-20 12:13 GMT   |   Update On 2019-11-20 12:13 GMT
வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

வத்தலக்குண்டு:

சேலம் மாவட்டம் அத்தூரைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 50). இவர் கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு திருப்பூரில் இருந்து தேனிக்கு அரசு பஸ்சை ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை வத்தலக்குண்டு சாலையில் செங்கட்டாம்பட்டி அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியில் வந்து கொண்டு இருந்தது.

லேசான சாரல் மழை பெய்தபடி இருந்ததால் டிரைவர் அங்கிருந்த பாலத்தை கவனிக்காமல் அதன் அருகே திடீரென பிரேக் போட்டார். இதில் பஸ் நிலைதடுமாறி தலை குப்புற கவிழ்ந்தது. உடனே பஸ்சில் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர்.

இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று கூடி பஸ்சுக்குள் இருந்தவர்களை வெளியே மீட்க போராடினர். மேலும் இது குறித்து பட்டி வீரன்பட்டி போலீசாருக்கும், வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் பஸ்சுக்குள் இருந்த பயணிகளை வெளியே மீட்டனர். படுகாயமடைந்த டிரைவர் ரமேஷ்குமார் உள்பட 16 பேர்களை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே ரமேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 15 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியிலும் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தனியார் ஆஸ்பத்திரியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அம்ரூத் மனைவி ருக்குமா (40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Tags:    

Similar News