செய்திகள்
சென்னை ஐகோர்ட்

நடைபாதை, அரசு அலுவலகங்களில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளை அகற்ற கோரி வழக்கு

Published On 2019-11-07 09:08 GMT   |   Update On 2019-11-07 09:08 GMT
நடைபாதை, அரசு அலுவலகங்களில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளை அகற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள சாலைகள், நடைபாதைகள், நீர் நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், அரசு அலுவலக வளாகங்கள் ஆகியவைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களை அகற்றவேண்டும். இந்த இடங்களில் எல்லாம் வழிப்பாட்டு தலங்கள் இருக்கக்கூடாது என்று தமிழக அரசே கடந்த 1994-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆனால், அந்த அரசாணைக்கு எதிராக அரசு அலுவலகங்கள் எல்லாம் வழிப்பாட்டு தலங்கள் அமைக்கப்பட்டு பலர் வழிப்பாடு நடத்துகின்றனர்.

தமிழகம் முழுவதும் சாலைகள், நடைபாதைகள், நீர்நிலைகள், அரசு அலுவலகங்கள் என்று பொது இடங்களை ஆக்கிரமித்து 3 ஆயிரத்து 168 வழிபாட்டு தலங்கள் உள்ளன. இவை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே, இந்த வழிப்பாட்டு தலங்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயன், என்.சே‌ஷசாயி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் வக்கீல் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்களிடம் நீதிபதிகள், ‘இந்த வழக்கை தொடர்ந்ததற்கு பாராட்டுகிறோம். அதேநேரம், கட்சிக்காரரின் அமைப்பு கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டது. அந்த அமைப்பு ஏன் இதுகுறித்து பிரசாரம் செய்யலாமே?

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே? மனுதாரர் அமைப்பு நடத்தும் பத்திரிகைகளிலும் கட்டுரை எழுதலாமே?’ என்று கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையை எதிர்மனுதாரராக சேர்ந்த மனுதாரர், ஏன் வக்பு வாரியம், கிறிஸ்துவ பேராலயங்களின் அமைப்புகளை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு, நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News