செய்திகள்
கோப்பு படம்

மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1½ லட்சத்திற்கு ஆண் குழந்தை விற்பனை

Published On 2019-11-07 05:02 GMT   |   Update On 2019-11-07 05:02 GMT
மணப்பாறை அரசு மருத்துவமனையில் ரூ.1½ லட்சத்திற்கு ஆண் குழந்தை ஒன்று விற்கப்பட்ட சம்பவம் குறித்து தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,
மணப்பாறை:

திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சுமார் 50 வயதை கடந்த தம்பதி பிறந்து 25 நாட்களான பச்சிளம் ஆண்குழந்தையுடன் வந்தனர். பின்னர் அவர்கள் தங்களின் குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக டாக்டர்களிடம் தெரிவித்தனர். அதேபோல் குழந்தையின் எடையும் 1 கிலோ 100 கிராம் மட்டுமே இருந்தது.

உடனே அந்த குழந்தை பச்சிளம் குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் நர்சுகள் குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்ததை பார்த்து அந்த பெண்ணிடம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்குமாறு கூறினர். ஆனால் அந்த பெண் திருதிருவென முழித்துக்கொண்டு தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் தம்பதியிடம் விசாரித்தபோது, அந்த குழந்தை ரூ.1½ லட்சத்துக்கு விலைக்கு வாங்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் வெளியானது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவரது மனைவி கோமதி (50, இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). இந்த தம்பதிக்கு 30 வயதில் ஒரு மகன் இருந்தார். அவர் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்.

இதனால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட ஆறுமுகம்-கோமதி தம்பதியினர் மகனின் நினைவாக ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்பினர். சட்ட விதிகளின்படி, குழந்தையை தத்தெடுக்க அவர்கள் பல கட்ட முயற்சி செய்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து புரோக்கர் மூலமாக குறுக்கு வழியில் குழந்தையை விலைக்கு வாங்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் மணப்பாறையை சேர்ந்த புரோக்கர் அந்தோணியம்மாள் என்ற மேரி என்பவரை தொடர்பு கொண்டுள்ளனர். இவர் கடந்த 25 நாட்களுக்கு முன்பு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரி எதிர்புறம் வசித்து வந்த செல்வம் (54), விஜயலட்சுமி (30, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) தம்பதியருக்கு மூன்றாவதாக பிறந்த குழந்தையை ஆறுமுகம்- கோமதி தம்பதிக்கு விலை பேசி விற்றுள்ளார்.

இந்த குழந்தை மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்துள்ளது. ஏற்கனவே வறுமையில் வாடிவந்த செல்வம்-விஜயலட்சுமி தம்பதியிடம் பேசி அவர்களை மூளைச்சலவை செய்து ரூ.1½ லட்சத்திற்கு விலை பேசி வாங்கியுள்ளார். அதில் தனக்கு ரூ.20 ஆயிரம் கமி‌ஷனை எடுத்துக்கொண்டு மீதி தொகையை செல்வத்திடம் வழங்கியுள்ளார்.

குழந்தையை பெற்றுக்கொண்ட ஆறுமுகம்-கோமதி தம்பதியினர் மகிழ்ச்சியுடன் விராலிமலை திரும்பினர். இந்தநிலையில் குழந்தையை வாங்கி வந்த அடுத்த சில நாட்களிலேயே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றால் மாட்டிக்கொள்வோம் என்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

இந்தநிலையில்தான் கோமதியிடம் நர்சுகள் தாய்ப்பால் கொடுக்க வற்புறுத்தியபோது இந்த குட்டு அம்பலமாகியுள்ளது. இந்த குழந்தைக்கு கடந்த 10 நாட்களாகவே காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்து வருகிறது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் அந்த குழந்தைக்கு தீராத நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

விலைக்கு வாங்கிய குழந்தைக்கு இதுபோன்ற நோய் இருப்பதை அறிந்த ஆறுமுகம்-கோமதி தம்பதியினர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மற்றும் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரித்து வருகிறார்கள். இதுபற்றி ஆறுமுகம் கூறும்போது, 30 வயது மகனை விபத்தில் இழந்து எந்த பிடிமானமும் இல்லாமல் இருந்ததால் மகனின் நினைவாக இந்த குழந்தையை வாங்கினேன், இப்போது சிக்கலில் மாட்டி விட்டேன் என்றார்.

குழந்தை விற்கும் புரோக்கராக செயல்பட்ட அந்தோணியம்மாள் இதேபோல் மேலும் பல குழந்தைகளை விலை பேசி விற்றாரா? என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

குழந்தையை விற்ற விஜயலட்சுமி கூறுகையில், நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, வையம் பட்டி அருகேயுள்ள அனுக்காநத்தம் கிராமத்தில் உள்ள எனது அக்காள் வீட்டிற்கு சென்றேன். அங்கு எனக்கு குழந்தை பிறந்தது. பின்னர் 108 ஆம்புலன்சு மூலம் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தேன். அப்போதுதான் எனது வறுமையை கருத்தில் கொண்டு அந்தோணியம்மாள் என்ற புரோக்கர் மூலம் குழந்தையை விற்க முடிவு செய்தேன். எனக்கு கையில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கிடைத்தது. மணப்பாறையில் உள்ள முனியப்பன் கோவில் அருகே வைத்து குழந்தையை விற்றேன். அப்போது என்னிடம் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள் என்றார்.
Tags:    

Similar News