செய்திகள்
போலீசார் விசாரணை

திண்டுக்கல் அருகே ஆயுதங்களுடன் சிக்கிய ரவுடிக்கும்பல் கூலிப்டையா? என போலீசார் விசாரணை

Published On 2019-09-24 06:31 GMT   |   Update On 2019-09-24 06:31 GMT
திண்டுக்கல் அருகே பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமதுரை:

வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையிலான போலீசார் நேற்றிரவு தாமரைப்பாடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக சிலர் ரெயில்வே மேம்பாலத்தின் அருகில் பதுங்கி இருந்தனர்.

போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது முன்னுக்குபின் முரணான பதில் அளித்தனர். அவர்கள் அனைவரையும் வடமதுரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்த முருகபாண்டி மகன் கண்ணபிரான்(வயது41), தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரத்தை சேர்ந்த மணிகண்டன் (30), சேரன்மகாதேவியை சேர்ந்த சிவா(25), ஆழங்குளத்தை சேர்ந்த கணேசமுத்து(26), நெல்லை சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(31), பெருமாள்புரம் ரெட்டியபட்டியை சேர்ந்த ரமேஷ்(23), மேலப்பாளையம் நாகம்மாள்புரத்தை சேர்ந்த வெங்கடேசன்(22) என தெரியவந்தது. அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் விசாரணையில் திண்டுக்கல்லில் தங்கள் மீது ஒருவழக்கு இருப்பதாகவும், அந்த வழக்கு விசாரணைக்கு பணம் தேவைப்படுவதால் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக தெரிவித்தனர். ஆனால் இவர்கள் மீது திண்டுக்கல், நெல்லை உள்பட தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

எனவே இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர்கள் வேறு ஏதேனும் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News