செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ-சாக்ஸ் வழங்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2019-09-21 08:11 GMT   |   Update On 2019-09-21 08:11 GMT
அடுத்த கல்வியாண்டு முதல் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ-சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மதுரை:

மதுரை மற்றும் தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்படும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா விரகனூர் ரிங் ரோட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் இன்று நடந்தது.

இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணையை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய நாடே திரும்பி பார்க்கும் சாதனைகளை தமிழகத்தில் செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தற்போது பல சாதனைகளை செய்து வருகிறார்.



விவசாய குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் தான் குடிமராமத்து பணிகளை முதல்வர் செயல்படுத்தி உள்ளார்.

நீரை சிக்கனமாக சேமிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் தற்போது குடிமராமத்து பணிகளை செய்து வருகிறோம்.

20 லட்சம் மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறையும், 60 ஆயிரம் பள்ளிகளில் கணினியும், இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்படும்

துறைக்கு துறை போட்டி போட்டிக் கொண்டு பல நலத்திட்டப் பணிகள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில் தொடங்க ஏதுவான, சாதகமான மாநிலமாக இந்தியாவில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முதல்வரின் நடவடிக்கைதான் காரணம். ரூ. 3 லட்சத்து, 431 கோடி வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுள்ளோம்.

ஜெயலலிதாவிற்கு பிறகு அரசு எவ்வாறு செயல்படும் என கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டவர்களுக்கு பதிலாக அ.தி.மு.க. அரசு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்படும். மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஆய்வு செய்ய தமிழக முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அதன் அடிப்படையிலும் அங்கீகார ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

70 லட்சம் மாணவர்களின் கல்வியை செழுமைப்படுத்துவதற்கே அங்கீகார ஆணை வழங்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளிடம் அரசு பாரபட்சம் காட்டவில்லை. அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு ஷூ, சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News