செய்திகள்
சென்னை மாநகராட்சி

போன் செய்தால் வீட்டுக்கே இயற்கை உரம் தேடி வரும்- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Published On 2019-09-18 09:35 GMT   |   Update On 2019-09-18 09:35 GMT
போன் செய்தால் வீட்டுக்கே இயற்கை உரம் தேடி வரும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் சேகரமாகும் மக்கும் குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கையான தரமான உரம் பொதுமக்களுக்கு கிலோ ரூ.20-க்கு பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 4930 மெட்ரிக் டன் அளவிலான குப்பை மாநகராட்சி பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது.

பின்னர் இக்குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் தனியாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் தகுந்த மறுசுழற்சியாளர்களிடம் வழங்கப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 139 நுண் உரமாக்கும் மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள் மற்றும் 175 சிறு தொட்டிகள், 1711 உறை கிணறு மையங்கள், 21 புதை குழி மையங்கள், மற்றும் 2 வெர்மி உர மையங்கள் ஆகியவற்றின் மூலம் மக்கும் குப்பைகளிலிருந்து தரமான இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு சேகரமாகும் மொத்த குப்பையிலிருந்து சுமார் 400 மெட்ரிக் டன் அளவிலான மக்கும் குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றிலிருந்து தரமான உரம் தயாரிக்கப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுநாள் வரை சுமார் 160 மெட்ரிக் டன் அளவிலான இயற்கை உரம் பொதுமக்களுக்கு மலிவு விலையிலும் மாநகராட்சி பூங்காக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தற்பொழுது பெருநகர சென்னை மாநகராட்சி இடம் சுமார் 190 மெட்ரிக் டன் அளவிலான இயற்கை உரம் கையிருப்பு உள்ளது. இவ்வாறு பெ நகர சென்னை மாநகராட்சியின் மூலம் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உரங்கள் நே‌ஷனல் அக்ரோ பவுண்டே‌ஷன் மற்றும் சென்னை டெஸ்டிங்க் லேபரட்டரி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் பயன்படுத்துவதற்கு உகந்தவை என தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் நலன் கருதி இவ்வகையிலான இயற்கை உரம் கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த உரங்களை பொது மக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய ஏதுவாக பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகம் சார்பாக 9445194802 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் செயலியில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உரத்தின் அளவை குறிப்பிட்டு முழு முகவரியை வழங்கினால் நேரடியாக வீடுகளுக்கு சென்னை மாநகராட்சி மூலம் கொண்டுவந்து வழங்கப்படும்.

உரத்திற்கான பணம் வீடு தேடி வந்து உரத்தை வழங்கும்போது பெற்றுக்கொள்ளப்படும். இந்த அறிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் கூறி உள்ளார்.
Tags:    

Similar News