செய்திகள்
தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளி உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி

Published On 2019-09-16 17:33 GMT   |   Update On 2019-09-16 17:33 GMT
திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளி உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே செல்லமந்தாடியைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி. மாற்றுத்திறனாளி. இவரது தந்தை நெடுஞ்சாலைத்துறையில் காவலாளியாக பணிபுரிந்த போது இறந்து விட்டார். இதனால் வாரிசு வேலையை பெற வெங்கடாஜலபதியின் சகோதரர் மகேஷ் தடையில்லா சான்றிதழில் கையொப்பமிட வெங்கடாஜலபதியிடம் கேட்டுள்ளார்.

இதற்கு ரூ.1 லட்சம் தருவதாக உறுதியளித்துள்ளார். இதனை நம்பி வெங்கடாஜலபதி கையெழுத்து போட்டுள்ளார். அதன் பின்னர் பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளார். மேலும் இருவருக்கும் பொதுவான வீட்டை ஆக்கிரமிப்பு செய்து விட்டதாக அதிகாரிகளிடம் வெங்கடாஜலபதி புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று காலை திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து திடீரென பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். மேலும் மனு அளித்துச் செல்லுமாறு அவரை அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

அதன் பின் சிறிது நேரம் கழித்து சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் தன் உடலில் மண்எண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி வேறு இடத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது அந்த பெண் தனக்கு அருள் வந்தது போல பேசினார்.

நத்தம் சிறுகுடியைச் சேர்ந்த எனது பெயர் ஆசை பொன்னு (வயது 40). எங்கள் ஊரில் 2 மது பானக்கடை உள்ளது. மணல் திருட்டு நடந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். சாமியாகிய என்னாலேயே இதை தடுத்து நிறுத்த முடியவில்லை. நீதி செத்துக் கொண்டு இருக்கிறது. அதனால்தான் இங்கு வந்து எனது குறையை தெரிவிக்க வந்தேன் என்றார். அதனையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை எச்சரிக்கை செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News