செய்திகள்
படகு

தனுஷ்கோடி அருகே கள்ளத்தோணியில் வந்த இலங்கை வாலிபர் சிக்கினார்

Published On 2019-09-09 05:20 GMT   |   Update On 2019-09-09 05:20 GMT
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் தனுஷ்கோடி வந்த வாலிபரை பிடித்து கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம்:

அண்மையில் இலங்கையில் இருந்து தமிழகத்தில் நாசவேலைகளை நடத்த பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல் கொடுத்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

குறிப்பாக ராமேசுவரம், தனுஷ்கோடி சர்வதேச கடல் பகுதி நவீன கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.

இந்த நிலையில் தனுஷ் கோடி அருகில் உள்ள அரிச்சல்முனை பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிவதாக அந்த பகுதி மீனவர்கள் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக கூறினார். இதையடுத்து மண்டபத்தில் உள்ள கியூபிரிவு அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர், இலங்கை வவுனியா மாகாணம் செட்டிக்குளத்தைச்சேர்ந்த முருகையா மகன் அருண்ராஜ் என தெரியவந்தது

அவர் கள்ளத்தோணி மூலம் அரிச்சல்முனை பகுதிக்கு வந்ததாக தெரிவித்தார். அவர் அகதியாக இந்தியாவுக்கு வந்தாரா? அல்லது சதி திட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News