செய்திகள்
அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றுமாறு டிராபிக் ராமசாமி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.

ஒரத்தநாட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றிய டிராபிக் ராமசாமி

Published On 2019-08-28 05:08 GMT   |   Update On 2019-08-28 05:08 GMT
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை டிராபிக் ராமசாமி அகற்றினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பெரியார் சிலையில் இருந்து பைபாஸ் சாலையோரம் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு டிராபிக் ராமசாமி காரில் சென்றார். அப்போது ஒரத்தநாடு பெரியார் சிலை அருகே அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த பேனர்களை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே காரை விட்டு அவர் இறங்கினார்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டு இருந்த பேனர்கள், கொடி கம்புகளை அவரே அகற்றினார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஒரத்தநாடு போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

உடனே போலீசாரிடம், அனுமதி பெறாமல் பேனர்களை வைத்துள்ளார்கள். நீங்கள் எப்படி பார்த்து கொண்டு சும்மா இருக்கலாம்? என்று அவர் கேட்டார். அதற்கு போலீசார் பதில் கூறியதை கேட்டு அவர் எரிச்சல் அடைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பொதுமக்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் ஒருவழியாக டிராபிக் ராமசாமியிடம் சமாதானம் பேசினர். பின்னர் அங்கிருந்த பேனர்கள், கொடிகளை போலீசார் அகற்றினர்.

இதுபற்றி டிராபிக் ராமசாமி கூறியதாவது:-

விளம்பர பேனர்களை நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் அகற்ற வேண்டும். நான் பேனர்களை அகற்றிய போது என்னை தாக்குவதாக சிலர் சொன்னார்கள். இதற்கெல்லாம் நான் என்றும் பயப்படமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News