செய்திகள்
வங்கி அனுப்பிய நோட்டீசுடன் விவசாயி பாண்டியன்.

விவசாயிடம் பிடித்தம் செய்த தொகையை திருப்பி செலுத்தி விட்டோம்- வங்கி மேலாளர் தவறை ஒப்புக்கொண்டார்

Published On 2019-08-26 11:03 GMT   |   Update On 2019-08-26 11:03 GMT
திருவாரூரில் விவசாயியின் வங்கி கணக்கில் பிடித்தம் செய்த தொகையை திருப்பி செலுத்தி விட்டோம் என்று வங்கி மேலாளர் கூறியுள்ளார்.

திருவாரூர்:

திருவாரூரைச் சேர்ந்தவர் பாண்டியன்(வயது45), விவசாயியான இவருக்கு விளமல் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்தது.

அதில் தாங்கள் வங்கியில் வாங்கிய 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கடனை கட்டாததால் 2 சதவீதம் வட்டி உங்களது வங்கி கணக்கில் இருந்து வசூல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

எந்த கடனும் வாங்காத நிலையில் வங்கி நிர்வாகம் எப்படி தனக்கு நோட்டீஸ் அனுப்பியது என்று பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடன் கட்டவில்லை எனக்கூறி தனது மற்றொரு கிளையின் வங்கி கணக்கில் இருந்து வட்டியாக ரூ.4 ஆயிரத்து 600 வசூல் செய்யப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி பாண்டியன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திருவாரூரில் வங்கியில் கடன் வாங்காமலேயே விவசாயிக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் வங்கியின் மீதுதான் தவறு உள்ளது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து வங்கி மேலாளர் சக்திவேல் கூறியதாவது:-

விவசாயி பாண்டியனுக்கு வாங்காத ரூ.3.90 லட்சம் கடனுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் வங்கி நிர்வாகம் மீது தவறு உள்ளது. இதில் பாண்டியனுடைய வங்கிக் கணக்கு கடந்த 21-ந் தேதி மூடப்பட்டுவிட்டது.

மேலும் அவருடைய கணக்கில் இருந்து பிடித்த வட்டி அபராத தொகை 4,600 ரூபாயை மீண்டும் அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News