செய்திகள்
வன்முறை கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்ட ஜீப்

அம்பேத்கார் சிலை உடைப்பு - புதுவையில் பல இடங்களில் சாலை மறியல்

Published On 2019-08-26 10:05 GMT   |   Update On 2019-08-26 10:05 GMT
வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலை உடைப்பை கண்டித்து புதுவையில் பல இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

வேதாரண்யம் பகுதியில் நேற்று அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி புதிய பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி நெல்லித்தோப்பு சிக்னல் அருகே உள்ள வ.சுப்பையா சிலை அருகே தேவபொழிலன் தலைமையில் ஒன்று திரண்டனர். அங்கிருந்து பேரணியாக புறப்பட்ட அவர்கள் புதிய பஸ் நிலைய நுழைவு வாயில் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக வலியுறுத்தினர். போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்காமல் விடுதலை சிறுத்தை கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் நின்றது.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 61 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

ஊசுடு தொகுதி விடுதலை சிறுத்தை சார்பில் தொகுதி செயலாளர்தனுஷ் என்ற இளந்தமிழன் தலைமையில் அம்பேத்கார் சிலை உடைப்பை கண்டித்தும், அம்பேத்கார் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய கோரியும் பத்துக்கண்ணு சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தால் அவ்வழியே கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமையில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதனை விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏற்காமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

வானூர் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு 4 முனை சந்திப்பில் அம்பேத்கார் சிலை அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கலைமாறன் தலைமை தாங்கினார். இதில், நிர்வாகிகள் இளங்கோவன், நீதிதேவன், பற்குணம், நாகராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விடுதலை சிறுத்தை கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை ஏற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டம் காரணமாக அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் தமிழ்வளவன், கார்முகில், சுடர்வாணன், வெண்மணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரை தவளக்குப்பம் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுபோல் தமிழக பகுதியான ரெட்டிச்சாவடி, கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளிலும் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அம்பேத்கார் சிலை உடைப்பை கண்டித்து திருக்கனூர் அருகே குமாரபாளையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இன்று காலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் காட்டேரிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனை ஏற்று மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. காலை 8.30 மணி முதல் 9 மணி வரை சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபோல் புதுவையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News