செய்திகள்
கைது

பண பரிமாற்ற நிறுவனத்தில் நூதன முறையில் கொள்ளையடித்த ஈரான் கொள்ளையர்கள் 2 பேர் கைது

Published On 2019-08-25 12:26 GMT   |   Update On 2019-08-25 12:26 GMT
ஆயிரம்விளக்கு பண பரிமாற்ற நிறுவனத்தில் நூதன முறையில் கொள்ளையடித்த ஈரான் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

ஆயிரம்விளக்கு மாடல் பள்ளி சாலையில் ஜெயின்ஷா என்பவர் பண பரிமாற்றம் செய்யும் நிறுவனம் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த 21-ந்தேதி இவரது நிறுவனத்துக்கு 2 வாலிபர்கள் வந்தனர். வெளிநாட்டுக்காரர்கள் போல தோன்றிய அவர்கள் நிறுவன ஊழியரிடம் வெளிநாட்டு பணத்துக்கு உரிய இந்திய ரூபாய் பற்றிய விவரங்களை கேட்டனர். பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர்.

சிறிது நேரம் கழித்து நிறுவன ஊழியர் நிறுவனத்தில் இருந்த பணத்தை சரிபார்த்த போது அங்கிருந்து ரூ.35 ஆயிரத்தை காணவில்லை. உடனே அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வெளி நாட்டுக்காரர்கள் போல வந்த இருவரில் ஒருவர் நிறுவன ஊழியரிடம் பேச்சு கொடுத்து கொண்டிருந்த போது மற்றொருவர் அங்கிருந்த பணத்தை திருடியது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து தனது நிறுவனத்தில் திருடியவர் பற்றிய கேமிரா காட்சிகளை அருகே உள்ள கடைக்காரர்களுக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் அங்கு வந்தால் தகவல் தெரிவிக்கும்படி கூறினர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு 3 வாலிபர்கள் வந்தனர். தங்களிடம் அமெரிக்கா, சிங்கப்பூர் டாலர்கள் உள்ளது. அவற்றை மாற்றி இந்திய ரூபாயை தாருங்கள் எனக் கூறிய அவர்கள் அது தொடர்பான விவரங்களை விசாரித்தனர்.

அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கடைக்காரர் ஜெயின்ஷா அனுப்பியிருந்த காட்சிகளை பார்த்தார். அவரது நிறுவனத்தில் திருடிய 2 பேர் இங்கு வந்திருப்பதை உறுதி செய்த அவர் உடனே ஜெயின்ஷாவுக்கு போன் செய்தார்.

இதையறிந்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை கடைக்காரர்கள் விரட்டினர். இதில் 2 பேர் சிக்கினர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்டவர்களை ஆயிரம்விளக்கு போலீசில் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஈரானை சேர்ந்த அமீர்அலி (29), மோகன்இலாகி (29) என்பதும், தப்பி ஓடியவர் ஜாசன் என்பதும் தெரிய வந்தது.

சென்னையில் இதற்கு முன்பு சிக்கிய ஈரானிய கொள்ளையர்கள் கர்நாடகா, மும்பையில் இருந்து இங்கு வந்து கைவரிசை காட்டிய போது பிடிபட்டவர்கள் ஆவார்கள். ஆனால் கைதானவர்கள்ஈரான் நாட்டில் இருந்த கடந்த ஜூலை மாதம் விமானம் மூலம் டெல்லி வந்து, அங்கிருந்து ரெயில் மூலம் சென்னை வந்தது தெரியவந்தது. இவர்கள் இதற்கு முன்பு இதே போன்று எங்காவது கைவரிசை காட்டினார்களா? என விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News