செய்திகள்
இரணியல் அருகே வைக்கப்பட்டு உள்ள நூதன டிஜிட்டல் பேனர்.

இரணியல் அருகே திருமணத்தை தடுப்பவர்களுக்கு எதிராக நூதன பேனர் வைத்த வாலிபர்கள்

Published On 2019-08-11 14:34 GMT   |   Update On 2019-08-11 14:34 GMT
திருமணத்தை தடுப்பவர்களுக்கு எதிராக நூதன பேனர் வைத்த வாலிபர்களால் குமரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரணியல்:

இரணியல் அருகே உள்ள தலக்குளம் புதுவிளை பாலம் பகுதி வழியாக இன்று காலை நடந்து சென்றவர்கள் அங்கு உள்ள மின்கம்பத்தில் ஒரு டிஜிட்டல் பேனர் கட்டப்பட்டு இருப்பதை பார்த்தனர்.

அந்த பேனரில் முக்கிய அறிவிப்பு என்ற வாசகமும், மேளம், நாதஸ்வரம், பூரண கும்பம் போன்ற படங்களும் இடம்பெற்று இருந்ததால் அந்த வழியாக சென்றவர்கள் கவனத்தை அந்த டிஜிட்டல் பேனர் வெகுவாக கவர்ந்தது.

இதனால் அவர்கள் அந்த பேனரில் உள்ள வாசகங்களை படித்துப் பார்த்தனர். அப்போதுதான் அந்த பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத வாலிபர்கள் சேர்ந்து தங்கள் மனக்குமுறலை நூதன முறையில் பேனர் வைத்து வெளிப்படுத்தி இருந்தது தெரியவந்தது.

அந்த பேனரில் புதுவிளை இளைஞர்களுக்கு வரும் திருமணவரன்களை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி, நன்றி, நன்றி என்று குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் தங்களது நற்பணி தொடருமானால் சம்மந்தப்பட்டவர்களின் பெயர், புகைப்படம் ஆதாரத்துடன் வெளியிடப்படும் என்று எச்சரிக்கை வாசகமும் இடம்பெற்று இருந்தது. குறிப்பு என்று தனியாக தெரிவித்திருந்தனர். அதில் திருமண வரன்களை தடுப்பவர்கள் முன்கூட்டியே தெரிவித்தால் வாகன வசதி செய்து தரப்படும். இப்படிக்கு திருமண வரன் தேடும் இளைஞர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தன.

இதுபற்றி அந்த பகுதி மக்கள் சிலர் கூறும்போது இந்த பகுதியில் உள்ள பல வாலிபர்களுக்கு திருமண வரன் வரும்போது சிலர் அவர்கள் பற்றி அவதூறு பரப்பி வந்து வரன்களை திருப்பி அனுப்பிவிட்டனர். இதுபோல தொடர்ந்து நடந்ததால் பல வாலிபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள்தான் இதுபோல பேனர் வைத்து உள்ளனர் என்றனர்.

ஏற்கனவே இதுபோல அம்மாண்டிவிளை, வெள்ளிச்சந்தை உள்பட சில இடங்களிலும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனர்கள் செல்போனில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News