செய்திகள்
ஜிதின்ஷா

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறித்த கேரள வாலிபர் கைது

Published On 2019-08-03 05:10 GMT   |   Update On 2019-08-03 05:10 GMT
இன்ஸ்ட்டாகிராம் மூலம் பழகி கோவை பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறித்த கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

கோவை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி(34). திருமணமாகி விவாகரத்து பெற்றவர். தனியாக ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் ரேவதியுடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஜிதின்ஷா என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி இன்ஸ்ட்டாகிராம் மூலம் நண்பராக இணைந்தார்.

இதனை தொடர்ந்து இருவரும் செல்போன் மூலம் பேசி கொண்டனர். முதலில் நட்பாக பழகிய ஜிதின்ஷா பின்னர் தனக்கு இன்னும் திருமணமாகவில்லை எனவும் உங்களை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார்.

ரேவதியை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்ட ஜிதின்ஷா, அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு காரணங்களை கூறி ரூ. 7 லட்சம் வரை பெற்றுக்கொண்டார். ரேவதியின் கிரிடிட் கார்டையும் வாங்கி அதில் இருந்து பணத்தை எடுத்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் சின்னுஜேக்கப் என்பவர் கடந்த ஜூலை 14-ந் தேதி ரேவதியை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் நான் ஜிதின்ஷாவின் மனைவி எனவும், அவர் இது போல பல பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும், அவரது நடவடிக்கை பிடிக்காததால் அவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரேவதி ஜூலை 21-ந் தேதி ஆழப்புழாவில் இருந்து கோவை வந்த ஜிதின்ஷாவிடம் இது குறித்து கேட்டார். அப்போது ரேவதிக்கு கொலை மிரட்டல் விடுத்து, தகாத வார்த்தையால் ஜிதின்ஷா திட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து ரேவதி குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ரேவதியின் நண்பர்கள் மூலம் பிரச்சினை குறித்து பேசுவதற்காக கேரளாவில் இருந்து ஜிதின்ஷாவை கோவை வரவழைத்த போலீசார் அவரை கைது செய்தனர் .

அவர் மீது கொலை மிரட்டல் , மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜிதின்ஷாவை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து ரேவதி கூறியதாவது-

கேரளாவை சேர்ந்த ஜிதின்ஷா வெளிநாட்டில் வேலை தேடி வருவதாகவும் வேலை கிடைத்ததும் இருவரும் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடலாம் என கூறி தன்னை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்து விட்டார்.

ஜிதின்ஷா தன்னுடைய செல்போனில் இருந்து அவரது மனைவி சின்னுஜேக்கப் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி இருந்ததாகவும், அறிமுகமே இல்லாத ஒருவர் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தை முடக்கி இருப்பதை அறிந்த சின்னுஜேக்கப் என்னை தொடர்பு கொண்ட போதுதான், ஜிதின்ஷாவிற்கு திருமணம் ஆன வி‌ஷயம் எனக்கு தெரியும்.

தன்னை போல 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஜிதின்ஷா ஏமாற்றி பணம் பறித்துள்ளார். தனக்கு முன்னர் ஒரு பெண்ணிடம் ரூ.30 லட்சம் வரை பணத்தை வாங்கிக் கொண்டு ஜிதின்ஷா மோசடி செய்து உள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் அளிக்க முன் வராததால் அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தொடர்ச்சியாக இது போன்ற மோசடி வேலைகளை அவர் செய்து கொண்டு வந்துள்ளார்.

லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்ததால் தன்னால் ஜவுளி கடையை தொடர்ந்து நடத்த முடியாமல் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறேன். இனிமேல் யாரும் இதுபோன்று ஏமாறக் கூடாது என்பதற்காகவே போலீசில் புகார் தெரிவித்தேன்.மேலும் ஜிதின்ஷாவிற்கு அரபு நாட்டில் வேலை கிடைத்து இருப்பதாகவும், இன்னும் ஒரு வார காலத்தில் அவர்அங்கு வேலைக்கு செல்ல இருந்ததாகவும், அவர் வெளிநாடு செல்வதற்கு முன்னர் அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக அவர் மீது உடனடியாக புகார் கொடுத்தேன்.

தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட மேலும் பலர் புகார் அளிக்க முன்வர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு ரேவதி கூறினார்.

Tags:    

Similar News