செய்திகள்
விஷம்

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி

Published On 2019-07-31 05:54 GMT   |   Update On 2019-07-31 05:54 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுந்தரம் நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சொர்ணலதா.

இவர்களது மகன் விக்னேஷ் என்கிற வேணுகோபால். (வயது 39). இவருக்கு மேகலா என்ற மனைவியும், மித்ரன் என்ற குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் வேணுகோபால் விசைத்தறி வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இதற்காக சுயஉதவிக்குழு மற்றும் பல்வேறு இடங்களில் பணம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் அசலையும், வட்டியும் சேர்த்து அவரால் கட்ட முடியவில்லை.

இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கொடு என கேட்டு வற்புறுத்தி வந்தனர். நாளுக்குள் நாள் கடன் தொல்லை அதிகரித்ததால் வேணுகோபால் மனமுடைந்தார்.

ஒருபுறம் தொழிலில் நஷ்டம், மறுபுறம் கடன் தொல்லை போன்றைவையால் சிக்கி தவித்த வேணுகோபால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

நேற்று வீட்டில் மனோகரன் இல்லாத நேரத்தில், வேணுகோபால், மேகலா, சொர்ணலதா ஆகியோர் கேக்கில் வி‌ஷம் வைத்து சாப்பிட்டனர். இதில் குழந்தை மித்ரனுக்கு பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்துள்ளனர்.

பின்னர் அனைவரும் தூங்கினர். அப்போது வி‌ஷம் மெல்ல, மெல்ல உடல் முழுவதும் பரவியது. நள்ளிரவில் வாந்தி எடுத்து ஒவ்வொரு பேராக மயக்கம் அடைந்தனர்.

அப்போது அங்கு வந்த மனோகரன், இது பற்றி கேட்டபோது, நாங்கள் அனைவரும் வி‌ஷம் சாப்பிட்டு விட்டோம் என்று கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோகரன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மீட்டு, குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அளித்தனர். பின்னர் 4 பேரும் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News