செய்திகள்
நந்தனத்தில் மீண்டும் நான்கு வழிப்பாதை தொடங்கப்பட்ட காட்சி.

மெட்ரோ ரெயில் பணி நிறைவு- நந்தனத்தில் மீண்டும் நான்கு வழிப்பாதை

Published On 2019-07-27 09:34 GMT   |   Update On 2019-07-27 09:34 GMT
சென்னை நந்தனம் ஜங்‌ஷனில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் நான்கு வழிப்பாதை போக்குவரத்து தொடங்கப்பட்டு இருக்கிறது.
சென்னை:

சென்னை நகரில் மெட்ரோ ரெயில் இரு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.

இதில் அண்ணாசாலையிலும் மெட்ரோ ரெயில் பணி நடந்து வந்தது. இதனால் 2012-ம் ஆண்டு முதல் அண்ணாசாலை, நந்தனத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

நந்தனம் ஜங்‌ஷனில் உள்ள நான்கு வழிப்பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

அண்ணாசாலையில் நடக்கும் மெட்ரோ ரெயில் பணி வசதிக்காக போக்குவரத்து மாற்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் அண்ணாசாலையில் மெட்ரோ ரெயில் பணி நிறைவு பெற்றதாக மெட்ரோ நிர்வாகம் சார்பில் போக்குவரத்து போலீசாரிடம் தெரிவிக்கபட்டது.

இதையடுத்து நந்தனம் ஜங்‌ஷனில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் நான்கு வழிப்பாதை போக்குவரத்து தொடங்கப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் இனி வாகன ஓட்டிகள், தி.நகர் வெங்கட நாராயணா சாலையில் இருந்து மந்தைவெளி ஆர்.ஏ.புரத்துக்கு சேமியர்ஸ் சாலை வழியாக செல்லலாம்.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது, நந்தனம் ஜங்‌ஷனில் நான்கு வழிப்பாதையில் வாகனங்களை அனுப்பும் பணியில் தற்போது போலீசாரே ஈடுபடுகிறார்கள்.

வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து கண்காணிப்போம் என்றனர். மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறும் போது, கடந்த மார்ச் 29-ந்தேதி மெட்ரோ பணி நிறைவடைந்துவிட்டது என்று போலீசாரிடம் தெரிவித்துவிட்டோம். பழைய படியே போக்குவரத்தை மாற்றி கொள்ளலாம் என்றும் தெரிவித்தோம்.

இதையடுத்து தற்போது போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர் என்றார்.

ஒருவழிப் பாதையாக உள்ள முக்கிய சாலைகளைத் தேர்வு செய்து அதை இரு வழிப்பாதைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக தியாகராயநகர் பகுதிகளில் உள்ள ஒருவழிப்பாதைகளை இருவழிப் பாதைகளாக மாற்ற போக்குவரத்து போலீசார் ஆலோசித்து வந்தனர்.

அதன்படி, சோதனை முயற்சியாக நந்தனம் சேமியர்ஸ் சாலை - வெங்கட் நாராயணா சாலை இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் சாலையும் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும், தியாகராயநகர் வடக்கு போக் சாலை முழுவதும் இரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. நந்தனம் தேவர் சிலை அருகிலும் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
Tags:    

Similar News