செய்திகள்
ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரின் உருவம் கேமராவில் பதிவாகி உள்ள காட்சி

அரூர் அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2019-07-26 04:29 GMT   |   Update On 2019-07-26 04:36 GMT
ஏடிஎம் மையத்தில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதை வைத்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

அரூர்:

தர்மபுரி மாவட்டம், அரூர் கடை வீதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் புதன்கிழமை இரவு நுழைந்த மர்ம நபர் ஒருவர் அந்த மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துள்ளார்.

தொடர்ந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்து உள்ளார். அப்போது, சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு எச்சரிக்கை தகவல் சென்று உள்ளது.

இதையடுத்து அந்த வங்கியின் அதிகாரிகள் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடரந்து, அரூர் போலீசார் சம்மந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்துக்கு சென்றபோது, திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் தலைமறை வாகிவிட்டார். இதனால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பணம் தப்பியதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏ.டி.எம். மையத்தில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதை வைத்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

ஏற்கனவே நேற்று முன்தினம் இரவு சேலம் கிச்சிபாளையம் திருமால் நகரில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. அதே நாளில் அரூரிலும் வங்கி ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News