செய்திகள்
என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய வீடு.

பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டப்பட்டதா?- ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை

Published On 2019-07-20 04:55 GMT   |   Update On 2019-07-20 05:04 GMT
பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டப்பட்டதா? என்பது குறித்து ராமநாதபுரம், மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

ராமநாதபுரம்:

இலங்கை தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் இந்தியா வைச்சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து இந்திய தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தியதில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டுவது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் துபாயில் பணி செய்து கொண்டே வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டிய 14 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களை அந்த நாட்டு போலீசார் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர். டெல்லி வந்த 14 பேரையும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கைது செய்தனர்.

இவர்களில் சிலர், டெல்லியில் கைதான அன்சாருல்லா இயக்கத்திற்கு நிதி திரட்டியதும் கண்டறியப்பட்டது. கைதான 14 பேரில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்த ரபிஅகமது, பைசுல், முன்சகீர், முகைதீன் சாகுல்ஹமீது, வாலி நோக்கம் பாரூக், மதுரை நரிமேடு முகமது ஷேக் மைதீன் ஆகியோரும் அடங்குவார்கள். இவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்த தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று ராமநாதபுரம் வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவை சந்தித்த அந்த அதிகாரிகள், மாவட்டத்தில் நடத்த உள்ள சோதனை, விசாரணைக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அதுதொடர்பான உதவிகளை கோரினர்.

ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவையும் சந்தித்து வருவாய்த்துறை சார்பில் தேவைப்படும் உதவிகள் குறித்து விளக்கம் அளித்தனர். இதை தொடர்ந்து கீழக்கரையில் இன்று காலை அதிகாரிகள் அதிரடி விசாரணையை மேற்கொண்டனர்.

கீழக்கரையில் 4 பேரின் வீடுகளிலும், அவர்களுக்கு நெருக்கமானவர்களிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை விசாரணை நடத்தினர்.

இதேபோல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளவர்கள் மீது கீழக்கரையில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழக்குகள் ஏதும் உள்ளதா?, அவர்கள் வேறு எந்த இயக்கத்துடனும் தொடர்பில் இருக்கிறார்களா? என்பது குறித்தும் விசாரித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதேபோல் மதுரையைச் சேர்ந்த முகமது ஷேக் மைதீன் குறித்து விசாரணை நடத்துவதற்காக வந்த அதிகாரிகள் மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை சந்தித்து பேசினர்.

முகமது ஷேக் மைதீன் மீது மதுரை போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து மதுரை நரிமேடு பி.டி.ஆர். நகர் 5-வது தெருவில் உள்ள முகமது ஷேக் மைதீன் வீட்டிற்கு சோதனையிட சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. முகமது ஷேக் மைதீன் கைதான விவரம் தெரிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டை பூட்டி விட்டு வேறு பகுதிக்கு சென்றுவிட்டார்கள். இதனை தொடர்ந்து அதிகாரிகள் திரும்பி வந்து விட்டனர்.

இந்த நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள், உள்ளூர் போலீசார், அதிரடி படையினர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நரிமேடு சென்று முகமதுஷேக் மைதீன் வீட்டில் சோதனை நடத்தினர். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களின் செல்போன்களையும் வாங்கி ஆய்வு செய்தனர். அதில் ஆவண பரிமாற்றம், வாட்ஸ்-அப், எஸ்.எம்.எஸ். போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

முகமது ஷேக் மைதீனுடன் இஸ்லாமிய அமைப்பில் தீவிர பற்று கொண்ட வேறு யாராவது தொடர்பில் உள்ளார்களா? முகமது ஷேக் மைதீன் மூலம் மதுரையில் வேறு யாருக்கும் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதேபோல் முகமதுஷேக் மைதீனின் பேராசிரியர் ஒருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடை பெற்றது.

சில மாதங்களுக்கு முன் ‘வாட்ஸ்அப்’ குழு மூலம் இயங்கிய கும்பல் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் விசாரணை மேற் கொண்ட நிலையில் தற்போது அன்சாருல்லா இயக்கம் தொடர்பாக விசாரணைக்காக வந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News