செய்திகள்
விபத்தில் சிக்கிய லாரி மற்றும் காரை படத்தில் காணலாம்.

செங்கோட்டை அருகே லாரி-கார் மோதல்: தனியார் நிதி நிறுவன மேலாளர்கள் 2 பேர் பலி

Published On 2019-07-13 10:23 GMT   |   Update On 2019-07-13 10:23 GMT
செங்கோட்டை அருகே இன்று அதிகாலை லாரி-கார் மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன மேலாளர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செங்கோட்டை:

புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் பிரபல நிதி நிறுவனத்தின் மேலாளராக பாண்டீஸ்வரன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்தின் புதுக்கோட்டை, திருச்சி பகுதி மேலாளர்கள் குற்றால சீசனை முன்னிட்டு அங்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று பாண்டீஸ்வரன், பொன் அமராவதி கிளை மேலாளர் ரமேஷ், புதுக்கோட்டை மண்டல மேலாளர் செந்தில்குமார், திருப்பத்தூர் மேலாளர் விஜயகுமார், ஆலங்குடி மேலாளர் காஜா மைதீன் ஆகியோர் ஒரு காரில் குற்றாலம் வந்தனர்.

பின்னர் அவர்கள் கேரளாவில் உள்ள அருவிகளுக்கு குளிப்பதற்காக இன்று அதிகாலை கார் மூலம் சென்றனர். அவர்கள் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களது காரும், எதிரே கேரளாவில் இருந்து செங்கோட்டை நோக்கி வந்த லாரியும் பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்த பாண்டீஸ்வரன், ரமேஷ் ஆகியோர் இருக்கையில் அமர்ந்தவாறே சம்பவ இடத்தில் பலியாகினர். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் புளியரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய செந்தில்குமார், விஜயகுமார், காஜா மைதீன் ஆகியோரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் முன் இருக்கையில் பலியாகி இருந்த 2 பேரையும் போலீசாரால் மீட்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து செங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரை உடைத்து பாண்டீஸ்வரன், ரமேஷ் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செந்தில்குமார், விஜயகுமாருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. காஜா மைதீன் நெல்லை அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. இது குறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றால அருவிகளில் குளிக்க வந்தவர்களில் 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News