செய்திகள்

மாணவர்கள் பஸ் தின கொண்டாட்டம் - டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை

Published On 2019-06-26 09:41 GMT   |   Update On 2019-06-26 09:41 GMT
சென்னையில் நடந்த பஸ் தின கொண்டாட்டத்தின் போது பணியில் இருந்த டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கத்தில் கடந்த வாரம் மாணவர்கள் பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பஸ்சின் மேற்கூரையில் ஆட்டம் போட்ட மாணவர்கள், டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் தவறி கீழே விழுந்தனர்.

இந்த சம்பவத்தின் போது பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவர் லட்சுமணன், கண்டக்டர் மருதவமணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 பேரும் குரோம்பேட்டையில் உள்ள பயிற்சி பள்ளிக்கு சென்று 1 வாரம் பயிற்சி எடுக்க வேண்டும் என்றும் நூதன தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துதுறை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

மாணவர்கள், பஸ்சை கடத்திச் செல்வது போல செயல்பட்ட போது அது பற்றி டிரைவர், கண்டக்டர் இருவருமே உரிய முறையில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கோ, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாணவர்களின் செயல்பாடுகள் பற்றி உடனடியாக தெரிவித்து இருந்தால் போலீசார் விரைந்து சென்று பஸ் தின கொண்டாட்டத்தை தொடக்கத்திலேயே நிறுத்தி இருப்பார்கள் என்றும், இதனை டிரைவர்-கண்டக்டர் இருவரும் செய்ய தவறி விட்டனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் மிரட்டியே பஸ்சை ஓட்டச் சொன்னதாக டிரைவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் பஸ் தின கொண்டாட்டத்தை தொடங்கியதும் சாலையோரமாக பஸ்சை நிறுத்துவதற்கே நான் முயற்சித்தேன் என்றும், மாணவர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டியதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் டிரைவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News