செய்திகள்

தம்பதியரின் வங்கி கணக்கில் ரூ.35½ லட்சம் கையாடல் செய்த மானேஜர் கைது

Published On 2019-06-22 05:04 GMT   |   Update On 2019-06-22 05:04 GMT
புதுவையில் தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த தம்பதியரின் பெயரில் காசோலை மற்றும் பணம் எடுக்கும் ரசீதை பயன்படுத்தி ரூ.35½ லட்சம் கையாடல் செய்த மானேஜரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை வைசியாள் வீதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. வியாபாரி. இவரும், இவரது மனைவியும் புதுவை நேரு வீதியில் உள்ள தனியார் வங்கி கணக்கில் சேமிப்பு கணக்கு வைத்து இருந்தனர்.

இதற்கிடையே இவர்களின் வங்கி கணக்கில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ரூ.35½ லட்சம் காணாமல் போனது.

இதை அறிந்த தம்பதியினர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று பணம் காணாமல் போனது தொடர்பாக முறையிட்டனர்.

இதையடுத்து வங்கி நிர்வாகம் கணக்குகளை ஆய்வு செய்த போது தம்பதியரின் வங்கி கணக்கில் பல்வேறு தேதிகளில் பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர்கள் பெரியகடை போலீஸ் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 3-ந் தேதி புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தம்பதியின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட கால கட்டத்தில் வங்கி மேலாளராக பணிபுரிந்த சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த பால சுப்பிரமணியன் (வயது 52). தம்பதியின் பெயரில் காசோலை மற்றும் பணம் எடுக்கும் ரசீதை பயன்படுத்தி ரூ. 35½ லட்சத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் தனியார் வங்கியின் சென்னை தாம்பரம் கிளையில் பணியாற்றிய மேலாளர் பாலசுப்பிரமணியத்தை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரை புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
Tags:    

Similar News