செய்திகள்

கல்வி கட்டணத்தை இணையத்தில் வெளியிட 1 மாதம் அவகாசம் - அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-06-21 08:22 GMT   |   Update On 2019-06-21 08:22 GMT
2018-21 ம் ஆண்டிற்கான நிர்ணயம் செய்யப்பட்ட கல்வி கட்டண விபரத்தை இணைய தளத்தில் வெளியிட அரசுக்கு 1 மாதம் அவகாசம் அளித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

மதுரையை சேர்ந்த ஹக்கீம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2017-18ம் ஆண்டிற்கான தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்தது. இதையடுத்து 2018-2021ம் ஆண்டுகளுக்கான தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை இதுவரை தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக்குழு நிர்ணயம் செய்யவில்லை.

இதனால் தமிழகத்தில் இயங்கி வரும் 7600 தனியார் பள்ளிகளில் பல பள்ளிகள் 2018-19ம் ஆண்டில் அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்தை விட அதிகமாக வசூலித்து வருகின்றனர்.

ஆகையால் 2018-2021ம் ஆண்டிற்கான நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை இணையதளத்தில் வெளியிடுமாறு தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழுவிற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 2018-21 ம் ஆண்டிற்கான நிர்ணயம் செய்யப்பட்ட கல்வி கட்டண விபரத்தை இணைய தளத்தில் வெளியிட 3 மாதம் அவகாசம் கோரினார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் 1 மாதம் அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News