செய்திகள்

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் தட்டுப்பாடு- நோயாளிகள் கடும் அவதி

Published On 2019-06-16 10:36 GMT   |   Update On 2019-06-16 10:36 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் வறண்டதால் அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

திருவள்ளூர்:

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் வறண்டதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தண்ணீருக்காக மக்கள் தினந்தோறும் காலி குடங்களுடன் தவித்து வருகிறார்கள்.

இதேபோல் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியிலும் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி 100 படுக்கைகள் வசதி கொண்டது. இங்கு திருவள்ளூர், மணவாளநகர், திருவாலங்காடு, ஈக்காடு, பூண்டி, கடம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சைக் பெற்று வருகின்றனர். 500க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்காக மகப்பேறு சிகிச்சை பிரிவு அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது அது பழுதடைந்ததால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிப்பது கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டது.

இதேபோல் நகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் தண்ணீரும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுவதாக தெரிகிறது. இதனால் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் கிடைக்காமல் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

இதனால் அவர்கள் வெளியில் சென்று ஒரு லிட்டர் குடிநீரை 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையும், 5 லிட்டர் கேன் 50 ரூபாய்க்கும் விலைக்கு வாங்கி வருகிறார்கள்.

மேலும் கேன் எடுத்து வந்தால், கடைகளில் ஒரு லிட்டர் தண்ணீர் 3 ரூபாயிலிருந்து 5 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறார்கள். இரவு நேரங்களில் நோயாளிகளின் அத்தியாவசியத்தை அறிந்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக நோயாளிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் கூறும்போது, ‘மருத்துவ மனையில் குடிநீர் பிரச்சினை குறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி நோயளிகள் படும் அவதியை தீர்க்க வேண்டும்’ என்றனர்.

Tags:    

Similar News