செய்திகள்

மெரினா கடற்கரை சாலையில் தடையை மீறி பைக் ரேஸ்- 20 பேர் கைது

Published On 2019-06-04 05:13 GMT   |   Update On 2019-06-04 05:13 GMT
சென்னை மெரினா கடற்கரை சாலையில் தடையை மீறி பைக் ரேசில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை:

சென்னை மாநகர சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடந்த விபத்தில் சாந்த மூர்த்தி என்ற இளைஞர் பலியானார்.

கடந்த சில நாட்களாகவே இளைஞர்கள் பலர் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து கடந்த 2-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு பைக் ரேசை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் இணைந்து சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் 29 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற்றது.

20 சட்டம்- ஒழுங்கு போலீசாரின் ரோந்து வாகனங்களும், 5 போக்குவரத்து வாகனங்களும் ரோந்து பணியில் ஈடுபட்டன. 2 உதவி கமி‌ஷனர்களின் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய 80 பேர் சிக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மது போதையில் வாகனங்களை ஓட்டியதாக 22 வழக்குகளும், மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் பயணம் செய்த குற்றத்துக்காக 10 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 130 பேரும் பிடிபட்டனர். மொத்தம் 23 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்று இரவும் பைக் ரேசை கட்டுப்படுத்த வாகன சோதனை நடத்தப்பட்டது. மெரினா கடற்கரை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் இரவு நேர சோதனையில் ஈடுபட்டனர். இதில் நேற்று இரவும் பைக்ரேசில் ஈடுபட்ட 20 பேர் போலீசில் சிக்கினர்.

அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசில் சிக்கிய 20 இளைஞர்களின் பெற்றோர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்களுக்கும், இளைஞர்களுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

பைக் ரேசை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து சாலை தடுப்புகளை அமைத்துள்ளனர். அதனை மீறி இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News