செய்திகள்

அரவக்குறிச்சியில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு- கமல் பிரசாரம் திடீர் ரத்து

Published On 2019-05-13 10:38 GMT   |   Update On 2019-05-13 10:38 GMT
அரவக்குறிச்சியில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கமல்ஹாசன் கார் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார்.

அரவக்குறிச்சி:

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரசாரம் செய்தார்.

கரூர் சின்னதாராபுரம், பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் திறந்த வேனில் நின்றவாறு அவர் வாக்கு சேகரித்தார். இரண்டாவது நாளாக இன்றும் அவர் அரவக்குறிச்சி நகர், தளவாபாளையம், புஞ்சை புகளூர் பகுதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். அத்துடன் இரவில் வேலாயுதம்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இதற்கிடையே அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வெஞ்சமாங்கூடலூர், குரும்பப்பட்டி மந்தை, இனங்கனூர், வேலம்பாடி, குப்பம் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று இரண்டாம் கட்ட பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதேபோல் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் இன்று இரண்டாவது நாளாக அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்கிறார். அவர் இரவில் வேலாயுதம்பாளையத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று பேச உள்ளார்.

எனவே வேலாயுதம்பாளையம் கிராமத்தில் கமல்ஹாசன் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கமல்ஹாசன் இன்று அரவக்குறிச்சி தொகுதியில் தனது இரண்டாவது நாள் பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். அவர் கார் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார்.

அதற்கு பதிலாக வருகிற 16-ந்தேதி கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்ய உள்ளார். அன்றைய தினம் வேலாயுதம்பாளையம் கிராமத்தில் மாலையில் நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்று பேசுகிறார்.

ஏற்கனவே நேற்று பள்ளப்பட்டியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தீவிரவாதம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அவரது பேச்சை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டோர் வன்மையாக கண்டித்துள்ளனர்.

இதற்கிடையே அரவக்குறிச்சி தொகுதியில் கமல் ஹாசன் தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News