செய்திகள்

கத்திரி வெயில் நாளை தொடக்கம் - தஞ்சையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலால் பொதுமக்கள் அவதி

Published On 2019-05-03 08:32 GMT   |   Update On 2019-05-03 08:32 GMT
கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திர வெயில் நாளை தொடங்குகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். #SummerHeat
தஞ்சாவூர்:

தஞ்சையில் கடந்த மாதம் முதல் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக காலை முதல் மாலை 5 மணி வரையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மதியத்துக்கு மேல் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெயில் வறுத்தெடுத்து வருகிறது.

இதனால் கோடை வெயிலை சமாளிக்க பழ ஜூஸ்கள், இளநீர், மோர், மற்றும் தர்ப்பூசணி, வெள்ளரி பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

தஞ்சையில் கடந்த சில நாட்களாக வெயில் 101 முதல் 104 டிகிரி வரை அடிக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு போய் பரிதாபமாக காட்சியளிக்கின்றன.

இந்த நிலையில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திர வெயில் நாளை (4-ந் தேதி) தொடங்குகிறது. இதனால் தஞ்சையில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என தெரிகிறது.

நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்து கொண்டே செல்வதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் முகத்தை மூடியபடியும், தொப்பி அணிந்தபடியும் செல்கின்றனர். பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி செல்கிறார்கள்.

தஞ்சையில் இன்றும் வெயிலின் கடுமையாக அடித்தது. இதனால் சாலையோரங்களில் இளநீர், தர்ப்பூசணி விற்பனை செய்யப்படும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

கத்திரி வெயில் வருகிற 29-ந் தேதி வரை உள்ளது. இதனால் இப்போதே ‘கண்ணை கட்டுதே..’ எப்படி கத்திரி வெயிலை சமாளிக்க போகிறோம்’... என்று மக்கள் எண்ணும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கவலை அடைந்துள்ளனர். வெயிலை சமாளிக்க இடைப்பட்ட காலத்தில் மழை பெய்தால் நல்லதாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். #SummerHeat

Tags:    

Similar News