செய்திகள்

தமிழகத்தில் போலீஸ் என்கவுண்டரில் இதுவரை 80பேர் பலி

Published On 2019-05-02 11:30 GMT   |   Update On 2019-05-02 11:30 GMT
தமிழகத்தில் இதுவரை 80 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். தமிழக போலீஸ் வரலாற்றில் ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே அதிக அளவில் ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். #PoliceEncounter
சென்னை:

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை காப்பாற்றுவதற்கு போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவ்வப்போது என்கவுண்டர்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 1980-ம் ஆண்டில் தான் போலீசார் குற்றவாளிகளுக்கு எதிராக துப்பாக்கியை தூக்கியதாக பழைய வரலாறு கூறுகிறது. நக்சலைட்டுகளை ஒழிப்பதற்காக போலீஸ் அதிகாரி தேவாரம் அப்போது தீவிர நடவடிக்கை எடுத்தார்.

இதில் நக்சலைட்டுகள் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இப்போது போலீஸ் டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் சைலேந்திரபாபு திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியபோதும், நக்சலைட்டுகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்பின்னர் படிப்படியாக நக்சலைட்டுகளின் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ரவுடிகள் பக்கம் திரும்பியது.

1998-ம் ஆண்டு சென்னையில் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதில் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே நடுரோட்டில் நடந்த மோதலில் பிரபல ரவுடி ஆசைத்தம்பி குண்டுக்கு பலியானார்.

2002-ம் ஆண்டு இமாம் அலி உள்பட 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2003-ம் ஆண்டு அயோத்தி குப்பம் வீரமணி பலியானார். 2004-ம் ஆண்டு சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனை போலீசார் சுட்டுக்கொன்றனர். 2007-ல் வெள்ளை ரவி சென்னை போலீசுடன் நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2010-ம் ஆண்டு கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கால் டாக்சி டிரைவர் மோகன் ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். அதே ஆண்டில் திண்டுக்கல் பாண்டி, கூடுவாஞ்சேரி வேலு ஆகியோரும் பலியானார்கள்.

2012-ம் ஆண்டில் சிவகங்கையை சேர்ந்த போலீஸ்காரர் ஆல்பின் சுதனை கொலை செய்த குற்றவாளிகளான பிரபு, பாரதி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதே ஆண்டில் தென் சென்னை பகுதியை வங்கி கொள்ளையர்கள் கலங்கடித்துக் கொண்டிருந்தனர். துப்பாக்கியால் சுட்டு வங்கிகளில் லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடித்த பீகார் கொள்ளையர்கள் 5 பேர் ஒரே இடத்தில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

வேளச்சேரியில் ஒரு வீட்டில் கொள்ளையர்கள் பதுங்கி இருந்தபோது தென்சென்னை இணை ஆணையராக இருந்த சண்முக ராஜேஸ்வரன் தலைமையிலான போலீசார் இந்த வேட்டையை நடத்தினர்.

இதன்பின்னர் சென்னையில் எந்த என்கவுண்டரும் நடைபெறாமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆனந்தன் என்ற ரவுடியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

ராயப்பேட்டையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகளை பிடிக்கச் சென்ற போலீஸ்காரர் ராஜவேலுவை 16 இடங்களில் வெட்டி விட்டு தப்பி சென்ற ஆனந்தன் தரமணியில் பதுங்கி இருந்த போது போலீசுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டான்.

இந்த நிலையில்தான் 10 மாதங்களுக்கு பிறகு சேலத்தில் இன்று ரவுடி கதிர்வேல் சுட்டுக்கொலப்பட்டான்.

தமிழகத்தில் இதுவரை 80 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.

தமிழக போலீஸ் வரலாற்றில் ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே அதிக அளவில் ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவரது ஆட்சியில் 2002 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் 11 ரவுடிகள் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு இரையானது குறிப்பிடத்தக்கது. #PoliceEncounter
Tags:    

Similar News