செய்திகள்
10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 2 அடி உயரமுள்ள மாணவி சுவேதாவை , பள்ளி ஆசிரியர்கள் பாராட்டிய போது எடுத்த படம்

திருக்காட்டுப்பள்ளியில் 2 அடி உயர மாணவி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி

Published On 2019-04-30 13:13 GMT   |   Update On 2019-04-30 13:13 GMT
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்ற பழமொழிக்கேற்ப உருவம் சிறியதானாலும் சாதனை பெரியது என்பது போல் 2 அடி உயரமே உள்ள மாணவி தன்னம்பிக்கையுடன் படித்து 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். #SSLCExam
பூதலூர்:

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பழமார் நேரிமாதா கோவில் தெருவைச்சேர்ந்த ஜெயபால். விவசாயி, இவரது மனைவி. இவர்களுக்கு மகள் சுவேதா. இவர் 2 அடி உயரம் மட்டுமே உள்ளார்.

திருக்காட்டுபள்ளியை அடுத்த அலமேலுபுரம் பூண்டி சின்னராணி உயர் நிலைப்பள்ளியில் மாணவி சுவேதா 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

தனது உயரம் குறைவாக இருந்த போதிலும் சக மாணவிகள், ஆசிரியர்கள் தந்த ஊக்கத்தால் மாணவி சுவேதா விடாமுயற்சியுடன் படித்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார்.

நேற்று வெளியான தேர்வு முடிவுகளில் மாணவி சுவேதா 291 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 76 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சிறப்பாக சுவேதாவும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தனது தேர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள பள்ளிக்கு வந்த சுவேதாவை பள்ளி தலைமை ஆசிரியர் வினோலா, மற்றும் அருட் சகோதரிகள் ஆசிரியர்கள் பாராட்டினர்.

பழமார்நேரி ஆர்.சி தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்தேன். அதன் பின்னர் அலமேலுபுரம் பூண்டி தொடக்கப்பள்ளியில் படித்தேன். சுக மாணவிகள், ஆசிரியர்கள் என்னிடம் வேறுபாடு காட்டாமல் நன்றாக பாடங்களை சொல்லிக் கொடுத்ததால் நான் தேர்ச்சி பெற்றேன். மேலும் பிளஸ்-1 படிப்பேன். அதற்கு கடும் முயற்சி எடுத்து படித்து உயருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி மாணவி சுவேதாவின் தாயார் வின்சி கூறும் போது, ‘‘ என் மகள் பிறந்த போதே உயர குறைபாடு தெரிந்து விட்டது. அவளை நாங்கள் வேறுபாடு காட்டாமல் வளர்த்து வந்தோம். 10 வகுப்பு தேர்ச்சி பெற்று மேலும் படிக்கிறேன் என்று சொல்வது மகிழ்ச்சிதான். ஆனால் அரசு என் மகளுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கி உதவித் தொகை வழங்கிட வேண்டும் என்றார். #SSLCExam
Tags:    

Similar News