செய்திகள்

மாதவரம்-சோழிங்கநல்லூர் மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக 2,865 வீடு, கடைகள் இடிப்பு

Published On 2019-04-25 10:04 GMT   |   Update On 2019-04-25 10:04 GMT
மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக 2,865 வீடு, கடைகள் இடிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ. 10 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்கப்படுகிறது. #Metrotrain
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

முதல் கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமானநிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - வண்ணாரப்பேட்டை வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை தொடங்கியது.

2-வது கட்டமாக மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 118.9 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரெயில் வழித்தடம் உருவாக்கப்படுகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுமான பணிகள் தொடங்கப்படுகிறது.

இதற்காக தனியார் மற்றும் அரசு நிலங்கள் 300 ஏக்கர் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது.

மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தட பாதைக்காக சாலையோரம் உள்ள 2,865 வீடு, கடைகள் இடிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு, இழப்பீடு தொகைக்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் ரூ. 10 ஆயிரம் கோடி செலவு செய்கிறது. 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிக்கான மொத்த திட்டச்செலவில் இது 15 சதவீதம் ஆகும்.

மெட்ரோ ரெயிலுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு தி.நகர், மேற்கு மாம்பழம், புரசைவாக்கம், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி பகுதிகளை சேர்ந்த வீடு, கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

மெட்ரோ ரெயில் நிறுவன கணக்கெடுப்புபடி 2,865 குடும்பங்களில் 9.455 பேர் மெட்ரோ ரெயில் திட்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் 165 குடும்பத்தினர் தங்களது வீடுகளை முழுமையாக இழந்துள்ளனர்.

777 குடும்பத்தினர் கடைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். சிறுசேரி, சிப்காட் பகுதிகளில் 97 குடும்பத்தினர் வீடுகளை இழந்துள்ளனர். 279 பேர் கடைகள் மற்றும் வணிக பகுதிகளை இழந்துள்ளனர்.

நிலம் கையகப்படுத்துவதற்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் நிலம் உரிமையாளர்கள் 2,970 பேருக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்காக இழப்பீடு தொகையாக ரூ. 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது. #Metrotrain
Tags:    

Similar News