செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் இன்று 2 பெண் பயணிகளிடம் ரூ.70 லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2019-04-13 05:20 GMT   |   Update On 2019-04-13 05:20 GMT
திருச்சி விமான நிலையத்தில் இன்று 2 பெண் பயணிகளிடம் ரூ.70 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. #TrichyAirport

திருச்சி:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வாகன சோதனை மட்டுமின்றி பஸ், ரெயில், விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை திருச்சி விமான நிலையத்திற்கு தனியார் விமானம் வந்தது. அதில் வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 2 பெண் பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களிடம் சோதனை நடத்திய போது, ரூ.70 லட்சம் மதிப்புள்ள 2,203 கிராம் தங்க செயின்களை கழுத்தில் அணிந்து அதனை துணியால் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரிடம் விசாரிக்கும் போது அவர்கள் மலேசியாவை சேர்ந்த தனலட்சுமி (வயது 61) மற்றும் சசிகலா என தெரியவந்தது. அவர்கள் பல லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தது எப்படி? யாருக்காக கடத்தி வந்தார்கள்? குருவியாக செயல்பட்டு கடத்தி வந்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக தினமும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ரூ.70 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தங்கம் கடத்தலை தடுக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #TrichyAirport

Tags:    

Similar News