செய்திகள்

பாலியல் புகார் தெரிவிக்க இலவச செல்போன் வசதி - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-04-09 09:13 GMT   |   Update On 2019-04-09 09:13 GMT
பள்ளி, கல்லூரி, மற்றும் பல்கலைக்கழகங்களில், பாலியல் தொடர்பாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி வசதி அறிமுகப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ் ஆர் பி அம்மணி அம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதனை, 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாநகராட்சி ஆணையர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் விசாரித்தார். ஆர்.எஸ்.புரம் பள்ளிக்கு மாற்றம் கோரி மல்லிகா என்ற தலைமை ஆசிரியை அளித்த கோரிக்கையை ஏற்று, அப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன் இடமாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

இருப்பினும், 2 கி.மீ. துரத்தில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறி ரங்கநாதனின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அரசிடம் நியாயமான ஊதியம் பெறும் ஆசிரியர்கள், பணலாபத்திற்காக தனியாக டியூசன் எடுக்கிறார்கள். இது விதிமுறைகளுக்கு முரணானது. இது போல் தனியாக டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை கண்காணித்து, விதிகளை பின்பற்றி கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஆசிரியர்கள் அரசை மிரட்ட, போராட்டங்களில் ஈடுபடுகின்றனர் என வேதனை தெரிவித்த நீதிபதி இளைய சமுதாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ஆசிரியர்களின் மீது கருணை காட்டாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பள்ளி, கல்லூரி, மற்றும் பல்கலைக்கழகங்களில், சமீப காலமாக ஒழுங்கின்மை, சட்ட விரோத நடவடிக்கைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டிய நீதிபதி, இது தொடர்பாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை 8 வாரங்களுக்குள் அறிமுகப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த தொலைப்பேசி எண்ணை அனைத்து கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகையில் இடம்பெற செய்ய வேண்டும். புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தனியாக டியூசன் நடத்தும் ஆசிரியர்களுக்கு எதிராகவும் அந்த இலவச தொலைப்பேசி எண்களில் புகார் அளிக்கலாம் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

அந்த ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சுற்றிக்கை அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும், தலைமை ஆசிரியர் ரங்கநாதன் மற்றும் தலைமை ஆசிரியர் மல்லிகா ஆகியோர் அவர்கள் பணி புரியும் பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகளை நட வேண்டும்.

மரம் நட்டது தொடர்பாக கோவை மாநகர ஆணையரிடம் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். #ChennaiHighCourt
Tags:    

Similar News