செய்திகள்

சில்லரை இல்லை என்று இறக்கி விட்டதால் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய மூதாட்டி

Published On 2019-03-14 15:02 GMT   |   Update On 2019-03-14 15:02 GMT
கிருஷ்ணகிரியில் சில்லரை இல்லை என்று இறக்கி விட்டதால் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய மூதாட்டியின் செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக சார்பில் கிருஷ்ணகிரியில் இருந்து போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் வரை செல்லக்கூடிய அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக  மாதுகுமார் என்பவரும், டிரைவராக சின்னசாமி என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று மாலை  வழக்கம் போல் கிருஷ்ணகிரியில் இருந்து சந்தூருக்கு செல்லும் டவுன் பஸ்சில் கண்டக்டர் மாதுகுமார், டிரைவர் சின்னசாமி ஆகிய 2 பேரும் பயணிகளை ஏற்றி கொண்டு சென்றனர். அப்போது கருங்கன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரது மனைவி லலிதா டவுன் பஸ்சில் ஏறினார். 

ஆலமரம் பஸ் நிறுத்தத்திற்கு லலிதா கண்டக்டர் மாதுகுமாரிடம் ரூ.50-யை கொடுத்து டிக்கெட்டு கேட்டார். அதற்கு மாதுகுமார் தன்னிடம் சில்லரை இல்லை எனவும், அதே பகுதியில் இன்னும் 2 பேர் இறங்குவதால் அவர்களுக்கும் சேர்த்தே டிக்கெட்டு எடுத்து கொள், அவர்களிடம் நீ டிக்கெட்டுக்கு உண்டான பணத்தை வாங்கி கொள் என்று அவர் லலிதாவிடம் கூறியதாக தெரிகிறது.
அதற்கு லலிதா, அவர்களுக்கு எதற்காக நான் டிக்கெட்டு வாங்க வேண்டும் என்று கூறி கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மாதுகுமார், லலிதாவை கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து லலிதாவை ஆலமரம் பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டு சென்றார். பின்னர் பஸ் சந்தூர் வரை சென்றுவிட்டு மீண்டும் ஆலமரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தது. அப்போது அங்கு லலிதா, அவரது கணவர் அண்ணாமலை, மகள் சுமதி, பேரன் அருள்குமார் ஆகியோருடன் அங்கு நின்றிருந்தார். பின்னர் அவர்கள் கண்டக்டர் மாதுகுமாரிடம் வாய்தகராறில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஏராளமனோர் திரண்டனர்.

வாய் தகராறில் ஈடுபட்ட அருள்குமார், லலிதா, சுமதி ஆகிய 3 பேரும் ஆத்திரத்தில் கண்டக்டர் மாதுகுமாரை சரமாரியாக தாக்கினர். உடனே கண்டக்டரும் அந்த 3 பேரை திருப்பி தாக்கினார். அங்கு திரண்டிருந்தவர்கள் மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதில் காயம் அடைந்த லலிதா, சுமதி, அருள்குமார் மற்றும் பஸ் கண்டக்டர் மாதுகுமார் ஆகியோர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பஸ்சில் இருந்த ஒரு பயணி வீடியோ பிடித்து வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார். இதனால் அந்த வீடியோ தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News