செய்திகள்

சேலத்தில் மக்கள் சந்திப்பு பயணம் - டி.டி.வி. தினகரன் மீது 4 போலீஸ் நிலையங்களில் வழக்கு

Published On 2019-02-26 12:49 GMT   |   Update On 2019-02-26 12:49 GMT
சேலத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது இரவு ஒலிபெருக்கி வைத்து பிரசாரம் செய்ததாக டிடிவி தினகரன் மீது 4 போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #TTVDinakaran
சேலம்:

சேலம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ., மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் என்ற பெயரில் கடந்த 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பிரசாரம் மேற்கொண்டார்.

20-ந் தேதி சேலம் மாநகர பகுதியான சூரமங்கலம், கோரிமேடு, கன்னங்குறிச்சி, அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம், தாதகாப்பட்டி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் அருகே இரவு 11 மணிக்கு மேல் ஒலிபெருக்கி வைத்து பிரசாரம் செய்தார்.

இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் அ.தி.மு.க. நிர்வாகி ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் டி.டி.வி. தினகரன், மாவட்ட செயலாளர்கள் வெங்கடாசலம், எஸ்.கே. செல்வம் உள்பட 7 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், 11 மணிக்கு மேல் ஒலிபெருக்கி வைத்து பிரசாரம் செய்து அதிகாரிகள் உத்தரவை மீறுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல 23-ந்தேதி கெங்கவல்லி, மல்லியகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தார்.

அப்போது மல்லியகரை கிராம நிர்வாக அலுவலர் காமராஜ், மல்லியகரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், இரவு 10 மணிக்கு மேல் விதிமுறையை மீறி ஒலிபெருக்கி வைத்து, பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசியதாகவும், அவருடைய கட்சியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதன் பேரில் டி.டி.வி. தினகரன் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கெங்கவல்லி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரவு 11 மணிக்கு மேல் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்ததால் நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். அதன் பேரில் டி.டி.வி. தினகரன் உள்பட அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதே போல தம்மம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், இரவு 12.45 மணியளவில் தம்மம்பட்டி பகுதியில் சாலையை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததுடன், கூம்பு வடிவ ஒலிபெருக்கி மூலம் அதிக சத்தம் ஏற்படுத்தியதால், டி.டி.வி. தினகரன் மற்றும் அவருடைய கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன் பேரில் டி.டி.வி. தினகரன் உள்பட பலர் மீது போக்குவரத்துக்கு இடையூறு செய்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல், அதிகாரி உத்தரவை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #TTVDinakaran
Tags:    

Similar News