செய்திகள்

தடை விதித்த ஒரு மாதத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு

Published On 2019-02-01 09:20 GMT   |   Update On 2019-02-01 09:20 GMT
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு ஒரு மாதத்தில் மீண்டும் அதிகரித்து விட்டது. #Plasticban
சென்னை:

தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்தது.

இதனால், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தம்ளர்கள், தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள் போன்றவற்றின் பயன்பாடுகள் நிறுத்தப்பட்டன. இதற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரசாரமும் நடந்தது. இதனால் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் தடைக்கு வரவேற்பு கிடைத்தது. பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்த தொடங்கினர்.

ஓட்டல்களில் உணவு பொருட்கள், பிளாஸ்டிக் தாள் பைகளில் கட்டிக் கொடுப்பது நிறுத்தப்படடது. வாழை இலை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. அலுமினிய கலவை பைகள் பயன்படுத்தப்பட்டன. நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இறைச்சியை ஓலைப்பெட்டிகளில் வைத்து கொடுத்தனர். காபி, டீ வாங்குவர்கள் பாத்திரம் கொண்டு போய் வாங்கும் நிலை உருவானது.

காய்கறி, பழம், தின்பண்டங்கள் விற்கும் சிறிய வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிப்பதை எதிர்த்தனர். பிளாஸ்டிக் பை தயாரிப்பாளர்கள் வேலை இழப்பதாக குற்றம் சாட்டினார்கள். வாங்கிய கடனை எப்படி அடைப்பது? என்றும் கேட்டனர்.

என்றாலும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தியது. கடைகளிலும், குடோன்களிலும் இருந்த ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு சில்லரை வியாபாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். என்றாலும் தொடர் நடவடிக்கை காரணமாக பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தது.

தற்போது தடை செய்யப்பட்டுள்ள 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் 160 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. என்றாலும் மீண்டும் பிளாஸ்டிக் பைகள், தம்ளர்கள், ஸ்டிரா போன்றவை தாராளமாக கிடைக்கின்றன.

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள், காய்கள், பழங்கள் போன்றவை பிளாஸ்டிக் பைகளில் வைத்து விற்கப்படுகின்றன. இதுபற்றி அவர்களிடம் கேட்ட போது வெளியூர்களில் இருந்து வரும் 70 சதவீத பூக்கள் பிளாஸ்டிக் பைகளில்தான் கொண்டு வரப்படுகின்றன. சில்லரையாக பூக்களை வாங்குபவர்களும் பூ வாடாமல் இருக்க பிளாஸ்டிக் பைகளில்தான் வாங்கிச் செல்ல விரும்புகிறார்கள். காய்கறிகள், பழங்கள் வாங்க வருபவர்களில் சிலர் தான் துணிப்பை கொண்டு வருகிறார்கள். மற்றவர்கள் காய்கறிகளை பேப்பரில் பொதிந்து கொண்டு போக விரும்புவதில்லை. எனவே பிளாஸ்டிக் பைகளில் கொடுக்க வேண்டியுள்ளது.

பரபரப்பாக இயங்கும் சென்னை தியாகராய நகரில் சிறு வியாபாரிகள் அனைவரும் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களில் பொருட்களை விற்கத் தொடங்கி இருக்கிறார்கள். காகித பைகளை விட பிளாஸ்டிக் பை தான் சில்லரை வியாபாரிகளுக்கு வசதியாக இருக்கிறது. பை கொண்டு வராதவர்களுக்கும் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை கொடுப்பதே எளிது. துணிப்பை கொடுத்தால் அதற்கு கூடுதல் பணம்தர யாரும் தயாராக இல்லை. எனவே வேறுவழி இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இது போன்ற காரணங்களால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு ஒரு மாதத்தில் மீண்டும் அதிகரித்து விட்டது. கடைகளிலும், ஓட்டல்களிலும் மீண்டும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

இதனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது. இனி அரசின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். #Plasticban
Tags:    

Similar News