செய்திகள்

ஆசிரியர் காலி பணியிடங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட் அரசுக்கு உத்தரவு

Published On 2019-01-23 11:31 GMT   |   Update On 2019-01-23 11:31 GMT
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. #MaduraiHCBench
மதுரை:

தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தொடக்க கல்வித்துறை சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர்.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, அரசு புதிதாக தொடங்கியுள்ள மழலையர் எல்.கே.ஜி, யு.கே.ஜி.வகுப்புகளில் பணி அமர்த்த 11.12.2018 அன்று சமூக நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 89-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை எடுக்க ஆசிரியர்கள் கிண்டர் கார்டன் பயிற்சி அல்லது மாண்டிசோரி கல்வி முடித்திருக்க வேண்டும். இந்த பயிற்சி முடிக்காத, இடைநிலை ஆசிரியர்கள் எவ்வாறு, எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை எடுக்க முடியும்.

இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக இருந்தால், அதே துறையில்தான் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் விதிகளுக்கு மாறாக தொடக்க கல்வியில் இருந்து, சமூக நலத்துறைக்கு மாற்றி அரசாணை வெளியிட்டிருப்பது ஏற்புடையது அல்ல.

எனவே, தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள இடைநிலை ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக சமூக நலத்துறை 11.12.18 அன்று வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று நீதிபதி சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்திலுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உபரியாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வருகிற 25-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். #MaduraiHCBench
Tags:    

Similar News