செய்திகள்
சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்திய பா.ஜனதா எம்.எல்.ஏ. சாமிநாதன்.

பிளாஸ்டிக்கை தடை செய்யக்கோரி புதுவை சட்டசபை வளாகத்தில் பா.ஜனதா எம்எல்ஏ தர்ணா

Published On 2018-12-31 08:21 GMT   |   Update On 2018-12-31 08:21 GMT
தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் பிளாஸ்டிக்கை தடை செய்யக்கோரி பா.ஜனதா எம்எல்ஏ புதுவை சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். #Plastic #BJPMLA
புதுச்சேரி:

தமிழகத்தில் நாளை முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு, நீர் நிலை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.



புதுவையில் ஏற்கனவே 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை உள்ளது. ஆனால் இந்த தடை கடுமையாக அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதால் புதுவையில் பிளாஸ்டிக் விற்பனை, தயாரிப்பின் கள்ளச்சந்தையாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் பிளாஸ்டிக்கை தடை செய்யக்கோரி பா.ஜனதா எம்எல்ஏ புதுவை சட்டமன்ற வளாகத்தில் மைய மண்டபம் செல்லும் வழியில் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் தனது கையில் பதாகைகளை பிடித்தபடி அமர்ந்திருந்தார். அந்த பதாகைகளில் தடை செய், தடை செய் புதுவை நகரை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை கெடுக்கும் பிளாஸ்டிக்கை புதுவையில் தடை செய் என்ற பதாகைகளை கையில் பிடித்தபடி கோ‌ஷம் எழுப்பினார்.

பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் திடீர் போராட்டம் சட்டசபை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தையை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து போராட்டத்தை கைவிட்டார்.  #Plastic #BJPMLA

Tags:    

Similar News