செய்திகள்

கர்ப்பிணியின் குழந்தைக்கு கிருமி பரவாமல் தடுக்க நவீன சிகிச்சை- 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு

Published On 2018-12-27 05:54 GMT   |   Update On 2018-12-27 05:54 GMT
எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணியின் குழந்தைக்கு கிருமி பரவாமல் தடுக்க 24 மணி நேரமும் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. #HIVBlood #PregnantWoman

மதுரை:

விருதுநகர் மாவட்டம்ட சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரத்தசோகை காரணமாக அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது.

அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி. கிருமி தொற்று இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் 3 பேரை டிஸ்மிஸ் செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நவீன சிகிச்சை கிடைக்கும் வகையில் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவக்குழு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

கர்ப்பிணி பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் கூறியதாவது:-

சாத்தூர் அரசு மருத்துவ மனையில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிப்புக்கு உள்ளான கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை அரசு மருத்து வமனை முதல் மாடியில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படடு வருகிறது. மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் டாக்டர் சாந்தி மற்றும் டாக்டர்கள் நடராஜன், ரஞ்சித் ஆகியோர் தலைமையில் மருத்துவக்குழு நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கர்ப்பிணி பெண் மற்றும் அவரது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு எச்.ஐ.வி. நோய் தொற்று தாக்கம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சர்வதேச தரத்தில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும்.

அந்த பெண்ணுக்கு ஏற்கனவே சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் நடைபெற்ற சிகிச்சை தரப்பட்டது. இருந்த போதிலும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள கர்ப்பிணி பெண்ணுக்கு இன்று காலை எச்.ஐ.வி. தொற்று உள்ளிட்ட அனைத்து பரி சோதனைகளையும் செய்து அதன் அடிப்படையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சர்வதேச தரத்துடன கூடிய “எய்ட்ஸ் வைரஸ் லோடு” என்ற அதிநவீன சாதனம் பயன்பாட்டில் உள்ளது. அதன் வாயிலாக கர்ப்பிணி பெண்ணின் உடலில் நோய் தொற்றின் தாக்கத்தை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ள கர்ப்பிணி பெண் நலமாக உள்ளார். இருந்தபோதிலும் மஞ்சள்காமாலை நோய் தொற்றுக்கான கிருமி பாதிப்பு உள்ளது. அவற்றுக்கான சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #HIVBlood #PregnantWoman

Tags:    

Similar News