செய்திகள்

போலீஸ் காவலில் மத்திய படை வீரர் பலி: 4 போலீசாருக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு- மனித உரிமை கமி‌ஷன்

Published On 2018-11-22 06:11 GMT   |   Update On 2018-11-22 06:11 GMT
போலீஸ் காவலில் பலியான மத்திய படை வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது. #humanrightscommission
சென்னை:

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் கோபால். 43 வயதாகும் இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கவில்தாராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

அதன் பிறகு சொந்த ஊரில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையைச் சேர்ந்த ஆசிரியர் சுகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக கோபாலிடம் விசாரணை நடத்துவதற்காக குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் இரவில் வந்து அவரை பிடித்துச் சென்றனர். மறுநாள் மாலையில் கோபால் இறந்து விட்டதாக அவரது மனைவி சுமலதாவுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுமலதா, தனது கணவர் கைது செய்யப்பட்ட போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தார். கணவர் எப்படி இறந்தார் என்பதற்கான காரணத்தை தன்னிடம் தெரிவிக்காமல் உடலை வேலூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்துவிட்டனர் என்று உயர் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தார்.

இது தொடர்பாக குடியாத்தம் டி.எஸ்.பி. கே.சுந்தரம், இன்ஸ்பெக்டர் கே.இன்பரசன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் உமா சந்திரன், போலீஸ் ஏட்டு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மேலும் தமிழ்நாடு மாநில மனித உரிமை கமி‌ஷனிலும் சுமலதா புகார் மனு கொடுத்து இழப்பீடு கேட்டார். அதன் மீது விசாரணை நடத்திய மனித உரிமை கமி‌ஷன் போலீஸ் காவலில் இருந்த கோபால் மரணம் அடைந்ததால் அதற்கு போலீசார் தான் பொறுப்பு ஏற்கவேண்டும். எனவே போலீஸ் டி.எஸ்.பி. உள்பட 4 பேரும் இறந்த கோபாலின் மனைவி சுமலதாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. #humanrightscommission
Tags:    

Similar News