செய்திகள்

கம்யூனிஸ்டு கட்சியினர் புயல் நிவாரண பணியில் ஈடுபடுங்கள்- முத்தரசன் வேண்டுகோள்

Published On 2018-11-16 07:57 GMT   |   Update On 2018-11-16 07:57 GMT
கஜா புயல் நிவாரண பணிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், அரசு அலுவலர்களுடன் சேர்ந்து ஈடுபடுங்கள் என்று முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #GajaCyclone
சென்னை:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

‘கஜா’ புயல் நேற்று நள்ளிரவு நேரத்தில் வேதாரண்யம் அருகில் கரை கடந்துள்ளது. கனமழையுடன் பலத்த புயல் காற்று வீசியதால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு பெயர்ந்து வீசப்பட்டிருக்கின்றன. குடிசை வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகளும், மின் கம்பங்களும் அடியோடு சாய்க்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கால் நடைகளும் சேதப்பட்டுள்ளன.

குடியிருப்புகளில் வசிக்க முடியாத பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்யவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த மோசமான இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாத்து, மறுவாழ்வை உறுதிப்படுத்தும் நிவாரண நடவடிக்கைக்களை தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், அரசு அலுவலர்களுடன் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார். #CPI #Mutharasan #GajaCyclone
Tags:    

Similar News