செய்திகள்

டாஸ்மாக் துணை மேலாளர் மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு- சோதனையில் ரூ.52,500 சிக்கியது

Published On 2018-10-27 06:26 GMT   |   Update On 2018-10-27 06:26 GMT
குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கணக்கில் காட்டப்படாத ரூ.52,500 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் டாஸ்மாக் துணை மேலாளர் மீது வழக்குபதிவு செய்தனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு செண்பகராமன்புதூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இங்கிருந்து தனியார் ஓட்டல்களுக்கு மது வினியோகம் செய்வதற்கு அதிக பணம் வசூல் செய்யப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மதியழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சால்வன்துரை, பெஞ்சமின், ரேமா மற்றும் போலீசார் செண்பகராமன்புதூரில் உள்ள டாஸ்மாக் குடோன் அலுவலகத்திற்கு நேற்று மாலை 4 மணிக்கு சென்றனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரிகளையும், ஊழியர்களையும், தங்களது இருக்கையில் அமருமாறு கூறினர். அவர்களது செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது மேலாளர் சுந்தரவள்ளி, துணை மேலாளர் சம்பத்திடம் விசாரணை மேற்கொண்டனர். அலுவலகத்தில் இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.52,500 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் எப்படி வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் அதிகாரிகளால் சரியான பதில் கூறமுடியவில்லை.

மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணிக்கு முடிவுக்கு வந்தது. அதிகாரிகள் அங்கிருந்த ஆவணங்களையும், பணத்தையும் கைப்பற்றினார்கள்.



பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக டாஸ்மாக் துணை மேலாளர் சம்பத் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. #tamilnews
Tags:    

Similar News