செய்திகள்

கேரள அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- அர்ஜூன் சம்பத்

Published On 2018-10-20 12:14 GMT   |   Update On 2018-10-20 12:14 GMT
சபரிமலை கோவில் பிரச்சினைக்காக கேரள அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். #Sabarimala #ArjunSampath
நாகர்கோவில்:

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக பக்தர்கள் அனைவரும் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டின் பல தீர்ப்புகளை உதாசீனப்படுத்தி உள்ளது. குறிப்பாக முல்லை பெரியார் அணை பிரச்சினை, கூம்பு வடிவ ஒலிபெருக்கி, காவிரி பிரச்சினைகளில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தவில்லை.

அய்யப்பன் கோவில் விவகாரத்தில் மட்டும் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த ஆர்வமாக உள்ளனர். ஆனால் இதற்கு மக்கள் காட்டிய எதிர்ப்பை கண்டு இப்போது பின்வாங்கியுள்ளனர்.

முதல்-மந்திரி பினராய் விஜயன், வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று 2 பெண்களை சபரிமலைக்கு அழைத்து செல்வதற்கு முதல்-மந்திரி பினராய் விஜயனே காரணம். இதன்மூலம் நாடு முழுக்க கலவரம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.

சபரிமலை கோவில் பிரச்சினைக்காக போராடிய பந்தளம் மன்னர் குடும்பத்தினர், தந்திரிகள் துன்புறுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக கேரள அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

மத்திய அரசும் இப்பிரச்சினையில் வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் உடனடியாக பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி சட்டம் கொண்டு வர வேண்டும். இதன்மூலம் அய்யப்பன் கோவிலை மத்திய அரசே ஏற்றுநடத்த வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மறு ஆய்வு மனுக்கள் போடுவது இப்பிரச்சினைக்கு தீர்வை தராது. இப்பிரச்சினை தொடர்பாக நாளை 21-ந் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய சத்தியாகிரக போராட்டம் நடைபெறும்.

தாமிரபரணி புஷ்கர விழா நடைபெறும் வேளையில் நதிகள் அனைத்தையும் தேசிய மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #ArjunSampath
Tags:    

Similar News