செய்திகள்

பாடகி சின்மயி பிரச்சனையால் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது- சரத்குமார்

Published On 2018-10-16 10:12 GMT   |   Update On 2018-10-16 10:12 GMT
பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களில் பாடகி சின்மயி பிரச்சனையால் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக சரத்குமார் கூறினார். #SamathuvaMakkalKatchi #Sarathkumar #MeToo
கரூர்:

கரூரில் அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி இளைஞர் எழுச்சி நாள் விழா மற்றும் உடல்நல விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவரும், நடிகருமான சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என ஆகமவிதி இருக்கிற போது, பாலின சமத்துவத்தை சுட்டிக்காட்டி பெண்களை அங்கு அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஏற்புடையதல்ல.

சபரிமலைக்கு என புனிதம் இருக்கிறது. அதனை காத்திட வேண்டும். சில கோவில்களில் ஆண்கள் சட்டையை கழற்றி விட்டுத் தான் செல்ல வேண்டும் என கூறுவார்கள். அங்கு சட்டையுடன் தான் செல்வேன் என கூற முடியுமா? எனவே கோவில்களுக்கு என்று வகுக்கப்பட்ட நம்பிக்கையை நாம் கடைபிடித்து தான் ஆகவேண்டும். எனவே பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது.

ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தில் ஆட்சி நடக்கிற போது, அதில் குறைகள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதனை மத்திய அரசுக்கு எடுத்து சொல்பவராக தான் கவர்னர் இருக்க வேண்டும். இதை விடுத்து கவர்னர் ஆய்வுக்கு செல்லக் கூடாது. அப்படியெனில் பிரதமர் மோடி செல்ல வேண்டிய இடத்திற்கு, ஜனாதிபதி ஆய்வுக்கு செல்ல முடியுமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

சிங்கப்பூரில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துகிறார்கள். எனவே வரும் காலத்தில் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தண்ணீரை பாதுகாப்பது, மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து ஆஸ்க் சரத்குமார் என்கிற செயலி மூலம் நடவடிக்கை எடுப்பதில் தீவிரமாக இருக்கிறோம்.

மீண்டும் மோடி பிரதமர் ஆவாரா? இல்லையா? என ஜோசியம் சொல்ல முடியாது. ஆனால் ஆக மாட்டார் என்பது எனது ஆழமான கருத்து.

கூட்டணி குறித்து பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருகிற போது எனது நிலைபாட்டை அறிவிப்பேன். ஸ்டெர்லைட் விவகாரத்தில் சிக்கிய வேதாந்தா நிறுவனத்திற்கு மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

பெண்களை மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். எந்த விதத்திலும் துன்பப்படுத்தக்கூடாது. அது நமது கடமை. பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களில் பாடகி சின்மயி பிரச்சனையால் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எந்த தவறு நடந்தாலும் தைரியமாக சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் பெண்கள் காலதாமதம் செய்யக்கூடாது. எப்போதோ செய்த தவறை பல ஆண்டுகள் கழித்து சொல்லும் போது அந்த மனிதன் மட்டுமல்ல அவனை சார்ந்த குடும்பமும் அசிங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #SamathuvaMakkalKatchi #Sarathkumar #MeToo
Tags:    

Similar News